

ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ரூ.2 ஆயிரத்து 287 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்டா ஜோஹ்ரி தெரிவித்தார்.
பொது பட்ஜெட்டுடன் இணைந்து முதல் முறையாக ரயில்வே பட்ஜெட்டையும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். இந்நிலையில் ரயில்வே பட்ஜெட் தொடர்பாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோஹ்ரி சென்னையில் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
மத்திய அரசு 2017-2018-ம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையில் ரயில்வே துறைக்கான திட்டங்களும் அறிவிக்கப்பட்டது. பயணிகள் பாதுகாப்பு, மூலதனம் மற்றும் வளர்ச்சிப் பணிகள், தூய்மை, நிதி மற்றும் கணக்கீட்டு சீர்த்திருத்தங்கள் ஆகியவற்றில் ரயில்வே கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு அந்தந்த மாநிலங்களுக்கான ரயில்வே பணிகளை மேற்கொள்வதற்கான நிதி ஒதுக்கீடு மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது இரண்டு நாள்களுக்குப் பிறகு அறிவிக்கப்படும். இந்த ஆண்டு தமிழகத்துக்கு புதிய ரயில் திட்டங்களும், புதிய விரைவு ரயில் அறிவிப்புகளும் இல்லை. தாம்பரம் ரயில் நிலையத்தை முனையமாக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் மார்ச் மாதம் நிறைவடையும். தண்டையார்பேட்டை ரயில் நிலையத்தை மற்றொரு முனையமாக்கும் பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை.
கடந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய வழித்தடத் திட்டமான மொரப்பூர்-தருமபுரி பணிகள் முதல் கட்டம் நிறைவடைந்துள்ளன. இந்த வழித்தடத்தில் ஆய்வுப் பணிகள் முடிக்கப்பட்டு ரயில்வே வாரியத்துக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அதிநவீன ரயில் நிலையமாக மாற்றப்பட உள்ளது. இதற்காக 42 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் இந்த ஆண்டு தொடங்கும். ரயில்வே துறையை மேம்படுத்த ஒட்டுமொத்தமாக ரூ.1 லட்சத்து 31 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு ரூ.2 ஆயிரத்து 287 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் பங்காக ரூ.55 ஆயிரம் கோடி தரப்படும். மீதமுள்ள நிதியை ரயில்வே துறை பல்வேறு திட்டங்களின் மூலமாக பெருக்கிக்கொள்ள வேண்டும். 2015-ம் ஆண்டில் தெற்கு ரயில்வேயின் வருமானம் ரூ.5,603 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு ரூ.5,505 கோடியாக இருந்தது.
இவ்வாறு வசிஷ்டா ஜோஹ்ரி தெரிவித்தார்.