Last Updated : 03 Apr, 2017 09:52 AM

 

Published : 03 Apr 2017 09:52 AM
Last Updated : 03 Apr 2017 09:52 AM

சேலம், நெய்வேலி, ஓசூர், புதுச்சேரி உட்பட நாடு முழுவதும் 45 நகரங்களில் விமான சேவை இந்த ஆண்டு இறுதிக்குள் தொடக்கம்: ரூ.2,500 கட்டணத்தில் பயணம் செய்யலாம்

தமிழகத்தில் 3 இடங்கள் உட்பட நாடு முழுவதும் 45 நகரங்களில் விமான சேவை இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்படுகிறது. விமானத்தில் பயணம் செய்ய ரூ.2,500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு விமான போக்குவரத்தை ஊக்குவிக்கவும், சாதாரண மக்கள் குறைந்த கட்டணத்தில் விமானத்தில் பயணம் செய்யும் வகையிலும் ‘உடான்’ திட்டத்தை மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிவித்தது. இந்த புதிய திட்டத்தின்படி தமிழகத்தில் சேலம், நெய்வேலி, ஓசூர் மற்றும் புதுச்சேரி உட்பட நாடு முழுவதும் 45 நகரங்களில் புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இந்த புதிய விமான நிலையங்கள் சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை கொல்கத்தா புனே, ஹைதராபாத், விசாகப்பட்டினம் உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களுடன் இணைக்கப்பட்டு 128 வழித் தடங்களில் விமானங்கள் இயக்கப் பட உள்ளது. இந்த திட்டத்தில் இணைந்து விமான சேவையாற்ற 5 விமான நிறுவனங்களுடன் ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது.

ரூ.2,500 கட்டணம்

‘உடான்’ திட்டத்தின்படி, ஒவ்வொரு விமானத்திலும் 50 சதவீத இடங்களுக்கு ஒரு மணி நேர பயணத்துக்கு ரூ.2,500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மாநிலங்களில் விமான நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அந்த மாநிலங்களில் இன்னும் சில மாதங்களில் விமான சேவை தொடங்கப்பட உள்ளது. ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத மாநிலங்களில் விமான சேவை தொடங்க தாமதமாகும். ‘உடான்’ திட்டத்தின்படி இந்த ஆண்டு இறுதிக்குள் 45 புதிய விமான நிலையங்களையும் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சாதாரண மக்கள் பயன்

தமிழகத்தில் அமையவுள்ள விமான நிலையங்கள் பற்றி சென்னை விமான நிலைய இயக்குநர் ஜி.சந்திரமவுலி கூறியதாவது:

‘உடான்’ திட்டத்தின்படி சேலம், நெய்வேலி, ஓசூர், புதுச்சேரியில் விமான நிலையங்கள் அமைய உள்ளன. இந்த விமான நிலையங்கள் சென்னை உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களை இணைக்கும். இதன் மூலம் வசதி படைத்தவர்கள் மட்டுமின்றி சாதாரண கிராமப்புற மக்களும் குறைந்த கட்டணத்தில் விமானத் தில் பயணம் செய்ய முடியும். சாதாரணமாக சென்னையில் இருந்து 4 பேர் பயணிக்கக் கூடிய சிறியரக விமானத்தை நெய் வேலிக்கு இயக்க குறைந்தது ரூ.2 லட்சம் செலவாகும். ஒருவருக்கு தலா ரூ.50 ஆயிரம் கட்டணம் வசூலிக்க வேண்டிவரும்.

இதுவே நெய்வேலியில் விமான நிலையம் அமைந்தால், சற்று பெரிய விமானங்களை இயக்க முடியும். அதில் அதிக பயணிகள் பயணிக்க முடியும் என்பதால், ரூ.2,500 கட்டணம் வசூலித்தாலே போதும். புதிய விமான நிலையங்கள் அமைந்தால் சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நெய்வேலி, கடலூர், விருத்தாசலம், கும்பகோணம், ஓசூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், புதுச்சேரி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர் உட்பட அருகில் உள்ள நகரங்களில் வசிக்கும் மக்கள் பயன்பெறுவார்கள்.

இவ்வாறு ஜி.சந்திரமவுலி தெரிவித்தார்.

தமிழகத்தில் விமான சேவை

இந்த ‘உடான்’ திட்டத்தின்கீழ் சேலத்தில் இருந்து பெங்களூரு, சென்னை, புதுச்சேரிக்கும்; நெய்வேலியில் இருந்து சென்னைக்கும்; ஓசூரில் இருந்து சென்னைக்கும்; புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத், சென்னை மற்றும் சேலத்துக்கும் விமான சேவைகள் தொடங்கப்படுகின்றன. சேலம், நெய்வேலி, புதுச்சேரி புதிய விமான நிலையங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது. ஓசூருக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.

விரைவில் புதிய இயக்குநர்

இந்திய விமான நிலையங்கள் ஆணையகத்தின் மண்டல செயல் இயக்குநர் வி.வி.ஜி.ராஜூ கடந்த மாதம் 31-ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அடுத்த வாரம் புதிய இயக்குநர் பொறுப்பேற்க இருக்கிறார். அதன்பின் தமிழகத்தில் விமான நிலையங்கள் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x