

சினிமாக்களில் இடம்பெறும் காட்சிகளின் தாக்கம் சமுதாயத்தில் பிரதிபலிக்கிறது என்று டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மாநில நீதித்துறை பயிலரங்கம் சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள் குறித்த 2 நாள் தேசிய கருத்தரங்கம் சென்னையில் நேற்று முன்தினம் தொடங் கியது. 2-ம் நாளான நேற்று ‘சட்டம், பெண் கள், ஊடகம், சினிமா’ என்ற தலைப்பில் விவாத அரங்கம் நடைபெற்றது. விவாத அரங்கைத் தொடங்கிவைத்து நீதிபதி ஏ.பி.ஷா பேசியதாவது:
தற்போது வெளிவரும் சினிமாக்களி லும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பெண்கள் முன்னிலைபடுத்தப்படுவ தில்லை. பெரும்பாலான படங்களில் ஒரு கவர்ச்சி நடன பாடலும், ஒரு பெண்ணை, ஆண் துரத்திச் சென்று காதலை வெளிப்படுத்துவதும்தான் இடம்பெறுகிறது. இதன் தாக்கம் சமுதாயத்தில் பிரதிபலிக்கிறது. அதனால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கிறது.
சினிமா மற்றும் தொலைக்காட்சியை ஒழுங்குபடுத்த அமைக்கப்பட்ட சட்டரீதியான அமைப்புகள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. அந்தந்த துறைகளே சுய ஒழுங்குமுறை அமைப்பை ஏற்படுத்தி முறைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதைத் தொடர்ந்து, ‘இந்து’ என்.ராம், மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதா கிருஷ்ணன், திரை பிரபலங்கள் சுஹாசினி, லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோருடன் விவாதம் நடைபெற்றது. ‘இந்து’ என்.ராம் பேசும்போது, ‘‘அண்மையில் ‘தி இந்து’ உள்ளிட்ட 4 பிரபல ஆங்கில நாளிதழ்களில், நிருபர்களின் பெயர்கள் இடம்பெற்ற கட்டுரைகள் குறித்து 3 மாதங்கள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டது. அதில் 73 சதவீதம், பெண்களின் பெயர்களே இடம்பெற்றுள்ளன. மொத்த பெண்களின் பெயர்களில் ‘தி இந்து’ நாளிதழில் மட்டும் 48 சதவீதம் இடம்பெற்றுள்ளது. தற்போது ஊடகத் துறைக்கு பெண்கள் அதிக அளவில் வருகின்றனர்’’ என்றார்.
பின்னர், தொழிலாளர் சட்டமும், பெண் களும் என்ற தலைப்பில் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு தலைமையில் விவாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிறைவு விழாவில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் பேசும்போது, ‘‘இந்த கருத்தரங்கில் ஊடகம் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துக்கொண்டனர். இது நீதித்துறையில் உள்ளோருக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் சார்ந்த வழக்குகளைக் கையாள வசதியாக இருக்கும்’’ என்றார்.