

குடும்பத் தகராறில் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற கணவரும் தீயில் கருகி உயிர் இழந்தார்.
கோடம்பாக்கம் சர்குலர் சாலையை சேர்ந்தவர் காந்தீஸ்வரன் (35). தனியார் நிறுவனம் ஒன்றில் பணி செய்து வந்தார். அவரது மனைவி ரபீயத்துல்லா பசாரியா (30). இருவரும் காதல் திருமணம் செய்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த ரபீயத்துல்லா பசாரியா, வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடனே காந்தீஸ்வரன் மனைவியை காப்பாற்ற முயன்றார். அப்போது, தீ அவர் மீதும் பற்றிக் கொண்டது.
இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். தகவல் அறிந்து கோடம்பாக்கம் போலீஸார் சம்பவ இடம் விரைந்தனர். 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி 2 பேரும் இறந்தனர். உயிரிழந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத் தக்கது.