

சட்டப்பேரவையில் ஆளுநர் கே.ரோசய்யா ஆற்றிய உரை குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் கருத்துக் களை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ராமதாஸ் (பாமக நிறுவனர்)
ஆளுநர் உரையில் மக்களுக்கு பயனுள்ள அறிவிப்புகள் எதுவும் இடம் பெறவில்லை. தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் ஆளுநர் உரை என்பது அரைகுறை திட்டங்களை பாராட்டுதல், முதலமைச்சருக்கு துதிபாடுதல் உள்ளிட்டவை அடங்கிய சடங்காக மாறி விட்டது.
முதலமைச்சர் ஜெயலலிதா வால் அறிவிக்கப்பட்ட 500 மதுக்கடைகளை மூடுவது, படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் மாணவர்களின் கல்விக்கடன்களை தள்ளுபடி செய்வது குறித்த அறிவிப்புகள் எதுவும் ஆளுநர் உரையில் இடம் பெறவில்லை. இந்த ஆளுநர் உரை, ஜெயலலிதாவை பாராட்டி மகிழ்ச்சிடையச் செய்ய வும், மக்களை ஏமாற்றவும் வெளியி டப்பட்ட அறிக்கையே ஆகும்.
வைகோ (மதிமுக பொதுச் செயலாளர்)
ஆளுநர் உரையில் இடம் பெற்றிருந்த விஷயங்கள் கடந்த 5 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் இடம்பெற்றிருந்தவையே. தாது மணல் விற்பனையை அரசே ஏற்பதோடு, புதிய கிரானைட் கொள்கை உருவாக்கப்படும் என்ற அறிவிப்புகள் வரவேற்கக் கூடியவை. டாஸ்மாக் கடைகளை மூடுவது, சிறு, குறு விவசாயிகளின் கூட்டுறவுக் கடன் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகளுக்கு உள்ள கடன் ஆகியவற்றை ரத்து செய்வது பற்றிய அறிவிப்புகள் ஆளுநர் உரையில் இடம் பெறாதது ஏமாற்றம் தருகிறது.
ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்)
ஆளுநர் உரையில் காவிரி, முல்லைப் பெரியாறு, கச்சத்தீவு, மீனவர்களின் வாழ்வாதாரம், ஜல்லிக்கட்டு, இலங்கைத் தமிழர் பிரச்சினை போன்றவைகள் இடம் பெற்றிருந்தன. இந்தப் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண மத்திய அரசை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.
மேலும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி பொது மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதுகாத்திடவும், விவசாயிகளின் ஒட்டுமொத்த விவசாயக் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்திடவும், கல்வி உரிமைச் சட்டத்தை முறைப்படுத்திடவும் உரிய நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
பாரிவேந்தர் (ஐஜேகே தலைவர்)
லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்படும் என்ற அறிவிப்பு வரவேற்க்கத் தக்கதாகும். ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை முறையாக செயல்படுத்தினால், தமிழகம் இந்தியாவின் முதல் மாநிலமாக மாறும்.
சேதுராமன் (மூமுக தலைவர்)
பிரதமரிடம் முதல்வர் டெல்லியில் அளித்த கோரிக் கைகள் அனைத்தும் ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ளன. வட மாவட்டங்களுக்கு வழக்கம் போலவே முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் உரையில் இடம்பெற்ற அறிவிப்பு கள் மாற்றத்துக்கானது.
கிருஷ்ணசாமி (புதிய தமிழகம் கட்சித் தலைவர்)
ஆளுநர் உரையில், மக்கள் பிரச்சினைகள் குறித்த எதையும் அறிவிக்கவில்லை. கவுரவக் கொலைக்கு எதிரான சட்டங்கள், வன்கொடுமைக்கு எதிரான சட்டங்கள், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கித் தரக்கூடிய எந்தவொரு தெளிவான திட்டமும் இடம்பெறவில்லை. ஆளுநர் உரை எந்த விதத்திலும் வரவேற்கும் வகையில் இல்லை.
தமிழிசை சவுந்தரராஜன் (பாஜக மாநிலத் தலைவர்)
தமிழகத்தில் கொள்ளை, கொலைச் சம்பவங்கள் அதிகரித் துள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு சரியாக உள்ள தாக ஆளுநர் உரையில் தெரிவிக் கப்பட்டிருப்பது வேதனை அளிக் கிறது. கூலிப்படைகளின் ராஜ்ஜியம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது.
கு.செல்லமுத்து (உழைப்பாளர் கட்சித் தலைவர்)
ஆளுநர் உரையில் வேளாண்மைத் துறையை முன்னேற்றுவதற்கான திட்டங் களோ, ஆக்கப்பூர்வ திட்டங் களோ இல்லை. சிறு குறு விவசாயிகளின் பயிர்க்கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது என்ற அறிவிப்பால் 10 சதவீதம் கூட விவசாயிகள் பயன் அடைய மாட்டார்கள். விவசாயிகளின் அனைத்துக் கடன்களும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். மொத்தத்தில் ஆளுநர் உரை ஏமாற்றத்தையே தருகிறது.