Published : 25 Feb 2017 10:34 AM
Last Updated : 25 Feb 2017 10:34 AM

கோடையில் நிரந்தரமாக குடிநீர் பஞ்சம்: வைகையை தூர்வார இதுவே சரியான நேரம்

காலம் கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம், அதுபோலத்தான் வைகை அணையை தூர்வார சரியான காலம் தற்போது கிடைத்தும், அதை செய்யாமல் அரசு காலம் கடத்தி வருகிறது ’ என வைகை பாசன விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.

வைகை நீர்ப்பிடிப்பு பகுதியிலிருந்து வரும் நீரினையும், பெரியாற்றின் நீரையும் தேக்கவே வைகை அணை கட்டப்பட்டது. இந்த அணையின் கட்டுமானப்பணி ரூ.3 கோடியே 30 லட்சம் திட்டமதிப்பீட்டில் 1954 ஜன.1-ம் தேதி தொடங்கப்பட்டது. 1958-ம் ஆண்டு பணிகள் நிறைவடைந்து. 1959-ல் அப்போதைய முதல்வர் காமராஜர் திறந்து வைத்தார். அணை கட்ட ரூ.2 கோடியே 90 லட்சம் மட்டுமே செலவானது. மீதம் ரூ. 40 லட்சம் ரூபாய் இருந்தது. காமராஜர் அந்த பணத்தில் அணையின் அடிவாரத்தில் அணையை பார்வையிட வரும் பொதுமக்கள் ஓய்வெடுக்கவும், அணையின் இயற்கை சூழலை ரசிக்கவும் பூங்கா கட்டிக் கொடுத்தார்.

அணையின் பாசனப்பரப்பு 7,031 ச.கி.மீ. வைகை அணையின் உயரம் 111 அடியாக இருந்தபோதும், அணையின் நீர் தேக்கம் அளவு 71 அடியாக இருக்கிறது. இதன் கொள்ளளவு 6 ஆயிரத்து 91 மில்லியன் கன அடியாகும். அணை கட்டிய பிறகு முதல் முறையாக 1960-ம் ஆண்டு நவ. 10-ம் தேதி நிரம்பியது. தொடர்ந்து 1961, 1962, 1963 ஆண்டுகளில் நிரம்பியது. அதன்பிறகு 1966, 1971, 1972, 1974, 1977, 1979, 1981, 1984, 1987, 1992, 1993, 1994, 1997, 1998, 1999, 2004, 2005, 2006, 2007, 2008, 2009, 2010 மற்றும் 2011 ஆண்டுகளில் நிரம்பியது. 2011-ம் ஆண்டிற்கு பிறகு மேற்கு தொடர்ச்சி மலை நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் அணை நிரம்பவில்லை. தற்போது அணையில் மணல் திட்டுகளும், சேறும், சகதியும் மட்டுமே காணப்படுவதால் கடந்த 5 ஆண்டாக கோடை காலத்தில் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நிரந்தர தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 21 அடியாக இருந்தாலும் இன்னும் 5 அடி வரை மட்டுமே குடிநீர் திட்டத்துக்கு தண்ணீர் எடுக்க முடியும். அதன்பிறகு அணையில் இருக்கும் மீன்களின் வாழ்வாதாரத்துக்கு நிரந்தரமாக தேக்கி வைக்கப்படும். இந்த 5 அடி தண்ணீரை இன்னும் ஒரு ஓரிரு வாரம் மட்டுமே வைகை அணையில் எடுக்க முடியும் என்பதால் மதுரை மாநகராட்சி, புறநகர் கிராமங்கள், திண்டுக்கல் மாவட்டத்தில் கடும் குடிநீர் பஞ்சம் நெருங்கிவிட்டது.

தொடர்ந்து மழை பெய்யாத பட்சத்தில் திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அடுத் தபோக விவசாயமும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனால், உணவு பஞ்சமும் ஏற்படும் வாய்ப் புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், விவசாயிகள், ‘‘இந்த சோகத்திலும் ஒரு நல்லது இருக்கிறது. வைகை அணையை தூர்வார சரியான காலம் இதுதான். தற்போது தூர்வாராவிட்டால் இனி எப்போதுமே தூர்வார வாய்ப் பில்லாமல் போய்விடும். வைகை அணையை தூர்வாரினால் அதனை முன்உதாரணமாக கொண்டு மற்ற அணைகள், கால்வாய்கள், கண் மாய்கள், குளங்களை தூர்வார திட்டங்கள் இயற்ற அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியும். அதன் மூலம், நீர்நிலைகளையும், விவசாயத்தையும், குடிநீர் ஆதாரத்தையும் பெருக்கலாம் என்கின்றனர்.

தூர்வாருவதை இயக்கமாக்கலாம்

இதுகுறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் வி.ராஜமாணிக்கம் கூறியதாவது: மதுரை மாவட்டத்தில் 5,803 ஹெக்டேர் விருதுநகரில் 1,468 ஹெக்டேர், சிவகங்கை மாவட்டத்தில் 20, 898 ஹெக்டேர், ராமநாதபுரத்தில் 22,018 ஹெக்டேர் விவசாய நிலங்கள் வைகை பாசனத்தில் நேரடியாக பயன் பெறுகின்றன. மறைமுகமாக வைகை ஆற்று நிலத்தடிநீரை பயன்படுத்தி 50 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன. அணையின் ஷட்டர் பகுதியில் நீரோட்டம் நிரந்தரமாக இருப்பதால் எந்த காலத்திலும் அங்கு மண் படியாது. அதை சொல்லி அதிகாரிகள் அணையில் மண் படியவில்லை என்று சொல்வது சரியானதல்ல.

அணையின் மற்றப் பகுதியில் 18 அடிக்கு மண் நிரம்பியிருக்கிறது. தற்போது இந்த மண்ணை அகற்று வதுதான் புத்திசாலித்தனம். மார்ச், ஏப்ரல் மாதத்திற்குள் தூர்வாராவிட்டால் ஜூன் மாதத்தில் பருவமழை தொடங்கிவிடும். அதன்பிறகு அணையை தூர்வார வாய்ப்பில்லை. அதுவரை அதிகாரிகள் தூர்வாருவதை தள்ளிப்போடலாம் என நினைக்கின்றனர். அதுவரை விவசாயிகள் அமைதியாக இருக்க மாட்டோம். விவசாயிகள், இளைஞர்களை திரட்டி, அணைகள் பாதுகாப்பு, நீர்நிலைகளை தூர்வாருவதை ஒரு இயக்கமாக முன்னெடுக்க உள்ளோம்.

இதற்கு முதற்கட்டமாக தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபரம் மாவட்ட மக்களை இந்த இயக்கத்துக்குள் ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளோம். அணையில் நிரம்பியிருக்கும் மண்ணை கொட்ட நிலமில்லை என்பதெல்லாம் அதிகாரிகள் தட்டிக்கழிப்பதற்காக சொல்லும் காரணம். அணையில் இருக்கும் மண் 100, 500 ஆண்டிற்கு முந்தைய மக்கிய மண். இந்த மண், துளியும் ரசாயனம் கலக்காத சுத்தமான இயற்கை உரம். இந்த மண்ணை விவசாய நிலங்களில் அடிமண்ணாக போட்டால் எக்காலத்திலும் விவசாயம் செழிக்கும். அடுத்த 10 ஆண்டுகளுக்கு நிலங்களுக்கு உரமே தேவையில்லை. அணையில் நிரந்தரமாக தண்ணீர் இல்லாமல் இப்படி வறட்சிக்கு இலக்கானால் அது அணையின் உறுதித்தன்மைக்கே ஆபத்தாகிவிடும்.

50 ரூபாய்க்கு உயர வாய்ப்பு

அணையில் தற்போது தண்ணீர் இல்லாமல் போனதிற்கு வறட்சி ஒரு புறம் காரணமாக இருந்தாலும், அணையில் கூடுதலாக தண்ணீரை தேக்கி வைக்க முடியாத அளவுக்கு மண் படிந்துள்ளதும் ஒரு முக்கிய காரணம். மதுரையில் தற்போது 20 லிட்டர் குடிநீர் 25 ரூபாய்க்கு வாங்கி மக்கள் குடிக்கின்றனர். குடிநீரை விலைக்கு விற்பது அரசியல்வாதிகள்தான்.

அவர்கள் தங்கள் சொந்த நிலத்தில் போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளில், எடுத்து குடிநீரை விலைக்கு விற்கின்றனர். இன்னும் சில நாட்களில் 50 ரூபாய்க்கு உயர வாய்ப்புள்ளது. வைகையில் குடிநீர் எடுப்பது நிறுத்தப்பட்டால் மதுரை மாநகராட்சி மக்கள் கழிப்பிடம் கூட செல்ல முடியாது.

அந்தளவுக்கு மக்கள் நிலை மிக மோசமாகிவிடும். விவசாயிகள் நிலை அதைவிட கொடுமையாக இருக்கிறது. அணைகளை பாதுகாப்பது விவசாயிகள் கடமை. அந்த கடமையை செய்ய உதவி செய்யுங்கள் என்றார்.

தூர்வாரினால் கூடுதலாக 2 டிஎம்சி நீரை தேக்கலாம்

பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் அணையில் 33 மில்லியன் கன மீட்டர் மண் இருப்பதாக கூறுகின்றனர். விவசாயிகள் தரப்பில் அணையின் ஷட்டர் தவிர்த்து மற்ற இடஙகளில் 18 அடிக்கு மண் இருப்பதாக தெரிவிக்கின்றனர். இந்த மண்ணை அப்புறப்படுத்தினால் அதிகாரிகள் கூடுதலாக 1 டிஎம்சி தண்ணீரை மட்டுமே தேக்கலாம் என்கின்றனர். விவசாயிகள், 2 டிஎம்சி தண்ணீரை தேக்கலாம் என்கின்றனர். அணையில் தற்போது மண், வண்டல் மணல், களிமண், கிராவல் மண் காணப்படுகிறது. சில இடங்களில் தாதுமணல் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 4 ஆண்டிற்கு முன் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று, வைகை அணையை இலவசமாகவே தூர்வார முன் வந்தது. அதற்காக அணையில் ஆய்வு மேற்கொண்ட அந்த நிறுவனம், மண் வளத்தை தங்கள் நாட்டுக்கு இறக்குமதி செய்வதற்கு ஒப்பந்தம் கோரியது. அதற்கு தமிழக அரசு மறுத்ததால் அந்த நிறுவனத்தின் முயற்சி ஆய்வுப்பணியோடு நின்றுபோனது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x