

விவசாய நிலங்களில் எரிவாயு குழாய்கள் பதிக்க கெயில் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதி தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து முறையிட தமிழக விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்க ளூருவுக்கு குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தை செயல்படுத்த இந்திய எரிவாயு ஆணையம் (கெயில்) திட்டமிட்டுள் ளது. இத்திட்டத்துக்கான குழாய் களை தமிழகத்தின் சேலம், கோவை, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், திருப்பூர், ஈரோடு ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள விளை நிலங்களில் பதிக்க திட்டமிடப் பட்டுள்ளது.
கெயில் நிறுவனத்தின் இந்த முயற்சிக்கு 7 மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர். விவசாய நிலங்களின் வழியாக எரிவாயு குழாய்கள் பதிப்பதை கைவிட்டு நெடுஞ்சாலைகள் வழியாக பதிக்கவும், விவசாயி களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்கவும் கெயில் நிறுவனத்தை தமிழக அரசு கேட்டுக்கொண்டது. இதை எதிர்த்து கெயில் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஏற்கெனவே திட்டமிட்ட பாதையில் குழாய்களை பதிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கிடையே, தீர்ப்பை மீண்டும் பரிசீலித்து முடிவெடுக்குமாறு உச்ச நீதிமன்றத் தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னை தலைமைச் செயலகத்தில் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வ நாதன், ஆர்.வைத்திலிங்கம் உள் ளிட்ட மூத்த அமைச்சர்களை தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சுந்தரம் தலைமை யில் விவசாயிகள் சங்கங் களின் பிரதிநிதிகள் சந்தித்து பேசினர். அப்போது விளைநிலங் களில் எரிவாயு குழாய்கள் பதித்தால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை சங்க நிர்வாகிகள் எடுத்துரைத்தனர்.
விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக சீராய்வு மனு தாக்கல் செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர்கள் உறுதி அளித்ததாக விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
பின்னர், தொழில்துறை அமைச்சர் தங்கமணி, செயலர் சி.வி.சங்கர் ஆகியோர் தலை மையில் நடைபெற்ற ஆலோச னைக் கூட்டத்திலும் விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது சீராய்வு மனுவில் இடம்பெற வேண்டிய அம்சங்களை விவசாயிகள் எடுத்துரைத்துள்ளனர்.
இதுதொடர்பாக விவசாய சங்கங்களின் நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘‘கெயில் விவகாரம் தொடர்பாக விரைவில் டெல்லி சென்று தமிழக எம்.பி.க்களை சந்திக்கவும், விவசாயிகள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யவும் முடிவு செய்துள்ளோம். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, தமிழக விவசாயிகளுக்கு நியாயம் வழங்குமாறு முறையிட உள்ளோம். அவரை சந்திப்பதற்கான முயற்சிகளை தொடங்கியுள்ளோம். தமிழக விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்’’ என்றனர்.
திருவாரூரில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் அதன் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நேற்று நடைபெற்றது. விளைநிலங்களில் கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதிப்பதை தடை செய்ய வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக எரிவாயு குழாய் பதிக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக, பிரதமரை சந்திக்க உள்ள விவசாயிகள் குழுவில், காவிரி டெல்டா விவசாயிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.