

தமிழ்நாடு வக்பு வாரிய தீர்ப்பாயத்தை உருவாக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழக தலைமைச் செயலருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டது.
இதுதொடர்பாக சென்னை வேப்பேரியைச் சேர்ந்த கே.மது என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
வக்பு வாரிய பிரச்சினை களுக்கு தீர்வு காண ஒவ்வொரு மாநிலத்திலும் வக்பு வாரிய தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பாயத்தில் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி, ஓய்வுபெற்ற வருவாய் அதிகாரி மற்றும் முஸ்லீம் சட்டங்கள் குறித்து தெரிந்த நபர் என 3 பேரை உறுப்பினர்களாக நியமித்து வழக்குகளை விசாரிக்கவேண்டும் என்றும், இந்த உத்தரவை அனைத்து மாநில அரசுகளும் அமல்படுத்த வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால், தமிழக அரசு இதுவரை, தமிழ்நாடு வக்பு வாரிய தீர்ப்பாயத்தை உருவாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து மே 1-ல் தமிழக தலைமைச் செயலரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தமிழ்நாடு வக்பு வாரிய தீர்ப்பாயத்தை உடனே உருவாக்கவும், அதற்கு தகுந்த உறுப்பினர்களை நியமிக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்தமனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுதொடர்பாக தமிழக தலைமைச் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூலை 11-க்கு தள்ளி வைத்தனர்.