

வாகன விபத்தில் படுகாயமடைந்த உதவித் தலைமை ஆசிரியருக்கு காப்பீட்டு நிறுவனம் மூலம் ரூ.75 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உதவித் தலைமையாசிரியராகப் பணியாற்றி வந்த ஏ.ஜேசுதாஸ், கடந்த 2008-ம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த ஒரு வாகன விபத்தின்போது படுகாயமடைந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், இடுப்புக்கு கீழ் உள்ள உடல் பகுதிகளில் அவருக்கு உணர்வு இழப்பு ஏற்பட்டது. இதனால் அவரால் நடமாட முடியாமல் போனது.
இந்நிலையில் விபத்துக்கு காரணமான வாகனத்தை காப்பீடு செய்த தனியார் காப்பீட்டு நிறுவனம் தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி ஜேசுதாஸ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த கிருஷ்ணகிரி நீதிமன்றம், ஜேசுதாசுக்கு ரூ.70 லட்சத்தை காப்பீட்டு நிறுவனம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் காப்பீட்டு நிறுவனம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் லோக் அதாலத் மூலம் விசாரிக்கப்பட்டது. அப்போது, பாதிக்கப்பட்ட ஜேசுதாசுக்கு ரூ.75 லட்சம் இழப்பீடாக வழங்க முடிவானது. இதனையடுத்து ரூ.75 லட்சத்துக்கான காசோலையை ஜேசுதாஸ் மனைவியிடம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் நேற்று வழங்கினார்.