Published : 10 Jan 2014 12:45 PM
Last Updated : 10 Jan 2014 12:45 PM

உதகை: மனித வேட்டை புலியைப் பிடிக்க கும்கிகள், மோப்ப நாய்கள், அதிரடிப்படை!

உதகையில் மூன்று பேரைக் கொன்ற புலியைப் பிடிக்கும் பணியில் அதிரடிப்படை, கும்கிகள், மோப்ப நாய்களை வனத்துறை ஈடுபடுத்தியுள்ளது.

நீலகிரி வடக்கு வனக்கோட்டம், வடக்கு சரகத்துக்கு உட்பட்ட சோலாடா கிராமத்தை சேர்ந்த கவிதா, தொட்டபெட்டா காப்புக் காட்டை ஒட்டியுள்ள சின்னப்பன், தும்மனட்டி அருகேயுள்ள குந்தசப்பை கிராமத்தில் முத்துலட்சுமி ஆகியோர் கடந்த ஐந்து நாட்களில், புலி தாக்கி இறந்துள்ளனர்.

புலியைப் பிடிக்க, தமிழக வனத்துறை முதன்மை வனப் பாதுகாவலர் லட்சுமிநாரயணன், கோவை மண்டல வனப் பாதுகாவலர் வி.டி.கந்தசாமி, மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் ஆகியோர் ஆலோசித்து வருகின்றனர்.

தேடுதல் பணியில், கும்கிகளை ஈடுபடுத்துவது என முடிவு செய்யப்பட்டு, முதுமலையிலிருந்து ஜான், தேக்கம்பட்டி யானைகள் நல வாழ்வு முகாமிலிருந்து வாசீம், விஜய் ஆகிய கும்கி யானைகள், குந்தசப்பை கிராமத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளன.

சத்தியமங்கலத்திலிருந்து ஆய்வாளர் ஜெய்சிங் தலை மையில் அதிரடிப்படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு யானை மீதும், மயக்க ஊசியுடன் கூடிய துப்பாக்கியுடன் கால்நடை மருத்துவர் ஒருவர், வன அலுவலர், அதிரடிப்படை வீரர் ஆகியோரும், மோப்ப நாய்களுடன் ஒரு குழு என தனித் தனியாக, வனப் பகுதியில் புலியைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

புலி நடமாட்டம் உள்ள தொட்டபெட்டா காப்புக்காட்டை ஒட்டியுள்ள 24 கிராமங்களில் உள்ள 45 பள்ளிகளுக்கு, வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

‘தொட்டபெட்டா காப்புக்காடுகள் அடங்கிய 25 சதுர கி.மீ., பரப்பில் 24 கிராமங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 15 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இவர்கள் இரவு நேரங்களில் வெளியில் நடமாட வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். இது குறித்தான துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு, கிராமங்களில் எச்சரிக்கை போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அசாதாரண சூழல் நிலவும்பட்சத்தில் புலியை சுட்டுக்கொல்லவும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக வனத்துறை முதன்மை வனப்பாதுகாவலர் லட்சுமிநாரயணன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x