ரூ. 2 கோடி கேட்டு கல்லூரி மாணவி கடத்தல்: 5 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது

ரூ. 2 கோடி கேட்டு கல்லூரி மாணவி கடத்தல்: 5 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது
Updated on
1 min read

ரூ. 2 கோடி கேட்டு கல்லூரி மாணவியை கடத்திய வழக்கில் 5 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

சென்னை அடையாறு சாஸ்திரி நகரைச் சேர்ந்த பிரபு என்பவரின் மகள் ப்ரீத்தி. தனியார் கல்லூரியில் பிடெக் இறுதியாண்டு படித்து வந்தார். கடந்த 2013 டிச.23-ம் தேதி கல்லூரி முடிந்து திரும்பும்போது ஒரு கும்பல் இவரை கடத்திச் சென்று பிரபுவிடம் ரூ. 2 கோடி கேட்டு மிரட்டியது.

இதுதொடர்பாக சாஸ்திரி நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கடத்தல்காரர்களிடம் பணம் கொடுக்கச் சென்ற மாணவியின் தந்தை பிரபுவை மாறுவேடத்தில் பின் தொடர்ந்தனர். பணத்தைப் பெற வந்த எல்ஐசி முகவரான பழனிச்சாமியை கைது செய்தனர். அவர் அளித்த ஒப்புதல் வாக்கு மூலத்தின் அடிப்படையில் மாண வியை கடத்தியதாக லோகநாதன், ராஜாமணி, முருகன், கார்த்திக் ஆகியோரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை 5-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து கடந்த 2016-ல் தீர்ப் பளித்தது. இந்த தண்டனையை எதிர்த்து 5 பேரும் உயர் நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்த னர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து மற்றும் நீதிபதி அனிதா சுமந்த் அடங்கிய அமர்வு, ‘‘ரூ.2 கோடிக்காக கல்லூரி மாணவியை கடத்திச் சென்று அடித்து துன்புறுத்தியது தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற கடத்தல் வழக்கில் குறைந்தபட்ச தண்டனையே ஆயுள்தான். இந்த வழக்கில் குற்றவாளிகள் 5 பேரும் சட்ட விரோதமாக கூடிய பிரிவை ஏன் கீழமை நீதிமன்றம் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்பது ஆச்சரியமளிக்கிறது. இருந்தாலும் இந்த வழக்கில் சரியான தண்டனை யைத்தான் கீழமை நீதிமன்றம் வழங்கியுள்ளது. ஆகவே 5 பேருக்கும் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நாங்களும் உறுதி செய்கிறோம்’’ என உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in