

எதிர்காலத்தில் உருவாகும் வாய்ப்புகளை முன்வைத்து உயர்கல்வியை தேர்வு செய்ய வேண்டும் என்று உயர்கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி ஆலோசனை வழங்கினார்.
உயர்கல்வியில் உள்ள வாய்ப்புகள் அறிய ’தி இந்து எஜுகேசன் பிளஸ்’ சார்பில் உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரியில் நடைபெற்றது. தற்போது 12-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் மட்டுமில்லாமல் வரும் கல்வியாண்டில் 9 முதல் 12-ம் வகுப்பில் படிக்க உள்ளோரும் இதில் பெற்றோருடன் பங்கேற்றிருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஜெயப்பிரகாஷ் காந்தி பேசியதாவது:
பிளஸ் 2 படிக்கும் காலத்தில் பல கனவுகள் மனதில் இருக்கும். வாய்ப்புகள் எப்படி இருக்கும் என்று அறியாமல் இலக்கு வைத்திருப்பார்கள். பலர் கனவு மட்டுமே காணுகின்றனர். அதற்கான உழைப்பை சிறு வயதில் இருந்து தொடங்குவதில்லை. இதுபோன்ற தவறுகளைத் தவிர்க்க வேண்டும். எதிர்கால வாய்ப்புகளை முன்வைத்துதான் உயர்கல்வியைத் தேர்வு செய்ய வேண்டும்.
தேர்வு செய்ய போகும் படிப்பு, எதிர்காலத்தில் நமக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதாக இருக்க வேண்டும். எதில் வாய்ப்பு, வளர்ச்சி இருக்கிறதோ அதைத் தேர்வு செய்வதுதான் புத்திசாலிதனம்.
தற்போது பொறியியலைப் பொருத்தவரை சிவில் படிப்புக்கு அதிக எதிர்கால வாய்ப்புகள் உள்ளன. சிவில் முடித்தபிறகு பல்வேறு உயர்படிப்புகள் உள்ளன. கட்டிடம், சாலை போக்குவரத்து உட்பட பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.
எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிஸ், ஐடி, ஆகியவை அடுத்து வருகின்றன. மெக்கானிக்கல் படிப்பை பெண்கள் எடுத்தால் உடனடி பணிவாய்ப்பு கிடைக்கும்.
வருங்காலத்தில் மிக வாய்ப்புகளை வழங்கும் படிப்பு சட்டம். அதனால்தான் பல முக்கிய பல்கலைக்கழகங்களில் சட்டப்படிப்புகளை தொடங்கி வருகின்றனர். அரசு தேசிய சட்டப்பள்ளியை திருச்சியில் தொடங்கியுள்ளது. இது நல்ல வாய்ப்பு.
குழந்தைகள் பேஸ்புக் பயன்படுத்தவதை பெற்றோர் அனுமதிக்கலாம். அதே நேரத்தில் அவர்கள் செயல்பாட்டை கண்காணிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
விஐடி பல்கலைக்கழக பேராசிரியர் ஜெயபிரகாஷ் ஜாலா பேசுகையில், "புதிய தொழிற்நுட்பத்தினால் பல புதிய பணிவாய்ப்புகள் உருவாகி வருகின்றன. அதற்கேற்ப நாம் நம்மை மேம்படுத்தி கொள்வது அவசியம். புதிய விசயங்களை கற்றறிய வேண்டும்" என்றார்.
உயர்நிலை படிப்பை தேர்வு செய்வது தொடர்பாக உளவியல் திறன் தேர்வு இந்நிகழ்ச் சியில் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்று நமது திறன் எந்த உயர்நிலைப்படிப்பிலுள்ளது என்பதை பங்கேற்பாளர்கள் அறிந்து கொண்டனர். இத்தேர்வினை போதி நிறுவனம் ஸ்பான்சர் செய்தது. அதையடுத்து போதி இயக்குநர் ராஜ்மோகன் பேசினார்.
அத்துடன் வினாடிவினா எழுத்துத்தேர்வும் இந்நிகழ்வில் நடந்தது. அதில் தேர்வான சிறந்த போட்டியாளர்கள் அஸ்வின், ஸ்ரீநிதி ஆகியோருக்கு கையடக்க கணினி பரிசாக தரப்பட்டது. இதை புல்கிட் மெட்டல் தனியார் நிறுவனம் அளிக்கிறது.
இக்கண்காட்சிக்கு விஐடி பல்கலைக்கழகம், ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி, சூர்யா கல்வி குழுமங்கள், ஆச்சார்யா வேர்ல்ட் கிளாஸ் எஜுகேஷன் ஆகியவை ஸ்பான்சர் செய்திருந்தன.