Published : 20 May 2017 09:57 AM
Last Updated : 20 May 2017 09:57 AM

10-ம் வகுப்புத் தேர்வில் 474 மதிப்பெண் பெற்ற கட்டிடத் தொழிலாளியின் மகள்

எண்ணம் உறுதியாக இருந்தால் இலக்கை அடைவதற்கு எதுவும் தடையல்ல என்பதை நிரூபித்திருக்கிறார் திருச்சியில் கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றும் தர்மராஜின் மகள் உமா மகேஸ்வரி. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு நேற்று வெளியானது.

திருச்சி காட்டூரில் உள்ள அரசு ஆதிதிராவிட நலவாரிய பெண்கள் பள்ளியில் பயின்ற மாணவி உமா மகேஸ்வரி 500-க்கு 474 மதிப்பெண் பெற்றார். அவர் பெற்ற மதிப்பெண் விவரம் தமிழ்- 95, ஆங்கிலம்- 94, கணிதம்-86, அறிவியல்-94, சமூக அறிவியல்-99. வேளாண் கல்வியை மேற்படிப்பாக பயில வேண்டும் என்பதே இவரது எதிர்காலத் திட்டம்.

உமா மகேஸ்வரியின் தாய் அன்னலட்சுமி, தந்தை தர்மராஜ் கட்டுமானத் தொழிலில் தினக்கூலிகளாக உள்ளனர். உமா மகேஸ்வரியுடன் பிறந்தவர்கள் இருவர். தனது தாய் வேலைக்குச் சென்றவுடன் வீட்டையும் கவனித்துவிட்டு பள்ளிக்கூடம் செல்வார் உமா மகேஸ்வரி.

"எனக்கு வேளாண் கல்வி பயில வேண்டும் என்பது ஆசை. எங்களுக்கு நிலம் ஏதும் இல்லை. இருந்தாலும் வேளாண் கல்வி மீது எனக்கு அதீத ஆர்வம் இருக்கிறது. ஆனால் எனது பெற்றோரால் அதற்கான செலவு செய்ய முடியுமா என்றுதான் தெரியவில்லை" என்றார் உமா மகேஸ்வரி.

குடும்பத்தில் நெருக்கடி இருந்தாலும் சொற்பமான அளவில் சம்பாதிக்கும் தர்மராஜ் தனது மூன்று குழந்தைகளையும் நன்றாக படிக்க வைப்பதே தனது லட்சியம் எனக் கூறுகிறார்.

அவரது மூத்த மகன் அரசு தொழிற்கல்வி மையத்தில் டிப்ளமோ படிக்கிறார். இளைய மகள் 8-ம் வகுப்பு பயில்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x