

ராக்கிங்கை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தெரிவித்துள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் 156-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள நூற்றாண்டு விழா அரங்கில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான கே. ரோசய்யா தலைமை வகித்தார்.
விழாவில் சிறப்புரையாற்றிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம், கல்வி நிறுவனங்களில் தொடர்ந்து நடைபெற்று வரும் ராக்கிங் சம்பவங்கள், கல்வியின் தரத்தை பாதித்துள்ளன. எனவே, ராக்கிங்கை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றார்.
மேலும், கல்வி நிறுவனங்களின் பணி பட்டதாரிகளை உருவாக்குவதோடு முடிந்து விடுவதில்லை. மாறாக, தவறுகளைத் தட்டிக் கேட்கின்ற, சமூக நீதிக்காக குரல் கொடுக்கக் கூடிய பொறுப்புள்ள மனிதர்களை உருவாக்க வேண்டியதும் பணியாகும் என்றார்.