

இலங்கை நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்திய பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தாம் பதவி விலக முன்வந்ததாக வெளியான தகவலை, மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் ஜி.கே.வாசன் மறுத்துள்ளார்.
தாஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பது குறித்து காங்கிரஸ் உயர் மட்டக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுவிட்டதாக வெளியான செய்தியில் உண்மையில்லை. அந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.
தமிழக மக்களின் உணர்வுகளை கருத்தில்கொண்டு முடிவுவெடுக்கும் அதே நேரத்தில், இந்தியாவில் உள்ள பல்வேறு கட்சிகள், அரசியல் தலைவர்கள் கூறியுள்ள யோசனைகளை ஆய்வுசெய்து, உரிய நேரத்தில் பிரதமர் நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புகிறேன். அதேபோல், நான் ராஜினாமா கடிதத்துடன் பிரதமரை சந்தித்ததாக வந்தத் தகவலும் தவறானது" என்றார்.
முன்னதாக, சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த ஜி.கே.வாசன், காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தினார். அதைத் தொடர்ந்து, இந்தப் பிரச்சினையில் அவர் பதவி விலக முன்வந்ததாக டெல்லி வட்டாரங்கள் கூறின.
வாசனின் பெயரைக் குறிப்பிடாமல், இந்த விவகாரத்தில் அமைச்சர்கள் மட்டத்தில் எதிர்ப்பு இருப்பதை மத்திய அரசு கவனத்தில்கொண்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியதும் கவனத்துக்குரியது.
தனிக் கட்சி துவங்கும் எண்ணம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, "கை சின்னம்தான் இந்தியாவில் முதல் அணியில் இருக்கும். மக்கள் ஆதரவுடன் மீண்டும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு டெல்லி ஆட்சி பீடத்தில் அமரும்" என்றார் ஜி.கே.வாசன்.