

சென்னையில் பத்தாயிரம் உட்புறச் சாலைகள் அமைக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்து ஒரு ஆண்டுக்கு மேலாகியும் அத்திட்டம் ஆமை வேகத்தில் செயல்பட்டு வருகிறது.
மாநகராட்சிகள் வரலாற்றி லேயே முதன் முதலாக பத்தாயிரம் சாலைகள் சென்னையில் தான் அமைக்கப்படுகின்றன என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மாநகராட்சி அறிவித்தது. இத்திட்டத்தின் முதல் கட்டம் ஜனவரி மாதத்திலும், அடுத்த கட்டம் மே மாதத்திலும் முடியும் என்று அறிவிக்கப்பட்டது. அப்போது இத்திட்டத்துக்கு சுமார் ரூ. 1200 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், இத்திட்டத்தை முடிப்பதற்கு தற்போது மேலும் 700 கோடி ரூபாய் தேவைப்படும் என்று தெரிய வந்திருப்பதால், அதனை நிதி அளிக்கும் நிறுவனமான டுபிட்கோவிடம் மாநகராட்சி கேட்டுள்ளது.
ஏற்கெனவே, நாடாளுமன்றத் தேர்தல், தொடர் மழை ஆகிய காரணங்களால் தாமதமாகி வரும் சாலை போடும் பணிகள் தற்போது நிதி பற்றாக்குறையால், தாமதமாகி வருகிறது. மக்களின் அடிப்படை வசதிகளில் ஒன்றான சாலைகள் போடுவதில் மாநகராட்சி மெத்தனமாக இருப்பது வருந்தத்தக்கது என்று சென்னைவாசிகள் கூறுகின்றனர். குறிப்பாக விரிவாக்கப்பட்ட பகுதிகளில் இன்னும் சில பகுதிகளில் சாலைகளே போடப்படவில்லை.
மதுரவாயில் கம்பன் நகரில் வசிக்கும் தீபா கூறுகையில், “எங்கள் பகுதியில் சாலைகளே இல்லாததால், மழைக் காலத்தின் போது மட்டுமல்லாமல், வெயில் காலத்தின் போதும், பிரதான சாலைக்கு செல்வது மிகக் கடினமாக உள்ளது” என்றார்.
எங்கே போனது 87.5 லட்சம்?
மழையால் சேதமடையும் சாலைகளை உடனடியாக சீரமைக்க 500 டன்கள் கோல்டு மிக்ஸ் எனப்படும் ஈரப்பதம் கொண்ட தார் கலவை 87.5 லட்சம் செலவில் இந்த மாதம் வாங்கப்பட்டது. எனினும், கடந்த வாரம் பெய்த மழையின் போது, சென்னையில் உள்ள 33,353 தெருக்களில் பல தெருக்கள் சேதமடைந்தன. ஆனால், அவற்றுள் வெகு சில மட்டுமே உடனடியாக பழுது பார்க்கப்பட்டன.
தரமணி கல்லுக்குட்டையில் வசிக்கும் ராஜா கூறுகையில், “எங்கள் பகுதியில் கடல் போல் நீர் தேங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இதே நிலை நீடிக்கிறது. இந்த சேதத்திலிருந்து மீளவே பல வாரங்கள் ஆகின்றன,” என்றார்.
சென்னை ஜி.பி.சாலையில் கடை வைத்திருக்கும் சம்சுதீன் கூறுகையில், “பல பேருந்துகள் செல்லக் கூடிய இந்த சாலையில் உள்ள குழிகளை உடனே மூட எந்த நடவடிக்கையும் இல்லை. பொதுமக்கள் தான் அருகில் இருக்கும் மரக் குச்சிகளையும் செங்கல் மீதிகளையும் கொண்டு சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்,” என்றார்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரியிடம் கேட்ட போது, “பத்தாயிரம் சாலைகள் திட்டத்தில் 30சதவீதம் மாநகராட்சி செலவில் முடிந்து விட்டது. டுபிட்கோவில் மேலும் 700 கோடி நிதி தருவதற்கான ஒப்புதல் கிடைத்துள்ளது. எனவே, பணிகள் தற்போது துரிதப்படுத்தப்படும். மழையால் பாதிக்கப்பட்ட 913 சாலைகளில் 3,522 பள்ளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 274 பள்ளங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன,” என்றார்.