

சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மத்திய அரசின் புதிய மாட்டிறைச்சி உத்தரவுக்கு எதிராக பொதுநல மனு தொடரப்பட்டுள்ளது.
நீதிபதிகள் எம்.வி.முரளிதரன், சி.வி.கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை செவ்வாயன்று விசாரிக்க ஏற்றுக் கொண்டுள்ளனர். இதனை அவசர வழக்காக ஏற்று விசாரணை நடத்த வேண்டும் என்பதையும் நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர். இந்த விசாரணையின் போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ஆர்.சுவாமிநாதன் இருக்க வேண்டும் என்று மத்திய அரசின் வழக்கறிஞர் கே.ஆர்.லஷ்மணிடம் அறிவுறுத்தியது.
எஸ்.செல்வகோமதி (45) என்ற சமூக ஆர்வலர் மற்றும் வழக்கறிஞர் இந்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:
மூலச்சட்டத்திற்கு எதிராக தற்போதைய சட்டவிதிமுறைகள் உள்ளது. மிருவவதைத் தடுப்புச் சட்டம் 1960-ன் பிரிவு 28 எந்த ஒரு சமூகத்தின் மத இணக்கங்களுக்கு ஏற்ப விலங்குகளை பலிகொடுப்பது குற்றமாகாது என்று குறிப்பிட்டு சொல்லப்பட்டுள்ளது.
மூலச்சட்டம் இறைச்சிக்காக கொல்லப்படுவதையும் இறைச்சிகாக விலங்குகளை விற்பதற்கும், வாங்குவதற்கும் அனுமதி வழங்குகிறது. எனவே மத்திய அரசு தனது சட்டமியற்றும் அதிகாரத்தை இந்த விவகாரத்தில் நீட்டிக்க முடியாது. அதாவது இறைச்சிக்காக விலங்குகளை விற்கவோ, வாங்கவோ கூடாது என்ற அளவுக்கு தன் அதிகாரத்தை மத்திய அரசு நீட்டிக்க முடியாது.
புதிய உத்தரவு அரசியல் சட்டம் பிரிவு 25-ன் படி அடிப்படை உரிமைகளை பறிப்பதாகும். மேலும் பிரிவு 29-ன் படி சிறுபான்மையின உரிமைகளைப் பாதுகாப்பதையும் மீறுகிறது. உணவுக்காகவோ, மத நம்பிக்கைக்காகவோ விலங்குகளை பலியிடுவது நாட்டின் பல்வேறு பிரிவினரின் பண்பாட்டு அடையாளமாக இருந்து வருகிறது.
இறைச்சிகாக மாடுகளை விற்கவோ வாங்கவோ கூடாது என்ற உத்தரவு அரசமைப்புச் சட்டம் 19(1) (ஜி) பிரிவின் படி உத்தரவாதம் அளிக்கப்பட்ட எந்த ஒரு நேர்மையான தொழிலை நடத்தவும் எந்த ஒரு சட்டத்துக்குட்பட்ட வர்த்தகத்தையும் நடத்த அடிப்படை உரிமை வழங்கியுள்ளதை மீறுவதாக உள்ளது.
மேலும் இது விவசாயிகள், விலங்கு வர்த்தகர்கள் உள்ளிட்டோரின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாகும்.
எந்த உணவை சாப்பிடுவது என்பதற்கான உரிமை (வெஜ் அல்லது நான்வெஜ்) சொந்த உரிமைக்குரியதே. எனவே இதனைத் தடை செய்வது உணவுக்கான உரிமை, தனியுரிமை, சுதந்திரம ஆகியவற்றை மீறுவதாக உள்ளது.
மேலும் கால்நடை வளர்ப்பு, பராமரிப்பு, பாதுகாப்பு ஆகியவை மாநில அரசின் சட்ட உரிமைகளுக்குள் உள்ளது. அதாவது இவைகுறித்தெல்லாம் சட்டமியற்றும் உரிமை மாநிலங்களுக்கே உள்ளது.
இவ்வாறு அவர் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.