

பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவை விடுதலை செய்ய வலியுறுத்தி டெல்லியில் அதிமுக எம்.பி.க்கள் இன்று உண்ணாவிரதம் இருக்கின்றனர். குடியரசுத் தலைவரை சந்தித்து முறையிடவும் முடிவு செய்துள்ளனர்.
ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து தமிழகம் முழுவதும் கடந்த 5 நாட்களாக அதிமுகவினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் உண்ணாவிரதமும் இருந்து வருகின்றனர். தமிழ்த் திரையுலகினர் சார்பில் சென்னையில் நேற்று முன்தினம் மவுன உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
இதற்கிடையே, ஜெயலலிதா உட்பட 4 பேர் சார்பில் ஜாமீன் கோரியும் தண்டனையை ரத்து செய்யக் கோரியும் பெங்களூர் உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுத்ததுடன், விசாரணையை அக்டோபர் 7-ம் தேதிக்கு தள்ளிவைத்தது. இதன் காரணமாக 7-ம் தேதி வரை ஜெயலலிதா சிறையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிமுக எம்.பி.க்கள் அனைவரும் நேற்றிரவு டெல்லி புறப்பட்டுச் சென்றனர். ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையைக் கண்டித்தும் அவரை விடுதலை செய்யக் கோரியும் டெல்லியில் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அதைத்தொடர்ந்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து முறையிடவும் திட்டமிட்டுள்ளனர்.