

தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, ஈரோடு, தூத்துக்குடி, விழுப்புரம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, தருமபுரி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.
திருச்சி, அரியலூர், கரூர், தஞ்சாவூர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திருப்பூர், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் இன்றும், நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல், தொடர் மழையால் புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு புதுச்சேரி மாநில அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி மலை ரயில் ரத்து:
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக மலை ரயில் பாதை பாதிக்கப்பட்டுள்ளதால் ஊட்டி மலை ரயில் இன்று ஒரு நாள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் நீர் வரத்து அதிகரிப்பு:
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. காலை நிலவரப்படி மேட்டூர் அணையில் நீர்மட்டம் 88.55 அடியாக இருந்தது. அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 9,353 கன அடியாகவும். அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு விநாடிக்கு 1,300 கன அடியாகவும் உள்ளது.