

தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்ட இடைத்தரகர் சுகேஷ், மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதிமுக துணைப் பொதுச் செய லாளர் டிடிவி.தினகரன், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும், இதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் ரூ.50 கோடி பேரம் பேசியதாகவும் கூறப் படுகிறது. இது தொடர்பாக டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி, சுகேஷ் சந்திரசேகரை கடந்த ஏப்ரல் 16-ம் தேதி கைது செய்தனர். சுகேஷ் கொடுத்த வாக்குமூலத்தை வைத்து டிடிவி.தினகரனையும், அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவையும் ஏப்ரல் 25-ம் தேதி டெல்லி போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், டிடிவி.தினகரன், மல்லிகார்ஜுனா ஆகியோருக்கு கடந்த 1-ம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டது. கடந்த மாதம் 22-ம் தேதி சுகேஷ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தினகரன், மல்லிகார்ஜுனா ஆகியோருக்கு ஜாமீன் கிடைத்துள்ள நிலையில், டெல்லி தீஸ் ஹசாரி மாவட்ட நீதிமன்றத்தில் சுகேஷின் வழக் கறிஞர் நேற்று மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.