தமிழர் மரபின் தொடர்ச்சிதான் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்

தமிழர் மரபின் தொடர்ச்சிதான் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்
Updated on
1 min read

சங்கக் காலத்திலிருந்து போரில் உயிர் நீத்தவர்களுக்கு நடுகல் அமைக்கும் தமிழர் மரபின் தொடர்ச்சிதான் இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் என்றார் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன். தஞ்சை விளார் சாலையில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத் திறப்பு நிகழ்ச்சியில் நெடுமாறன் பேசியது: "2009-ல் இலங்கையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தத் துயர நிகழ்வை வருங்காலத் தலைமுறையினரும் நினைவில் வைத்திருப்பதற்காகவும், உணர்வு பெறுவதற்காகவுமே இந்த நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இது போரில் உயிர் நீத்தவர்களுக்கு நடுகல் அமைக்கும் தமிழர் மரபின் தொடர்ச்சிதான். இந்த முற்றம் அமைப்பதில் சட்டத்துக்குப் புறம்பாக எதுவும் நடைபெறவில்லை" என்றார். மதிமுக பொதுச் செயலர் வைகோ பேசியது: "காமன்வெல்த் மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நவ. 12-ல் தமிழகத்தில் கடையடைப்பு, முழுஅடைப்பு, ரயில் மறியல் நடத்த அமைப்புகள் அழைப்புவிடுத்துள்ளன. இதில் அனைத்து மக்களும் பங்கேற்று வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலர் சி.மகேந்திரன்: "இலங்கைத் தமிழர்களின் விடுதலையை முள்ளிவாய்க்கால் பேரழிவுதான் சாத்தியப்படுத்தப் போகிறது. அதுதான் தமிழர்களின் பிரச்சினையின் தீவிரத்தை உலகுக்கு உணர்த்தியது" என்றார். பாஜக தமிழகத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன்: "இலங்கையில் தமிழர்களுக்குக் கொடுமைகள் தொடர்ந்தால், இலங்கையில் தனிஈழத்தை இந்தியா பெற்றுத் தர வேண்டும்" என்றார். தமிழ்த் தேசியப் பொதுவுடைமை கட்சியின் பொதுச்செயலர் பெ.மணியரசன்: "கடந்த ஆண்டு மாவீரர் நாள் நினைவு நிகழ்ச்சிக்குத் தடை விதித்த மாநில அரசு, இந்த முற்றத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் தடை கோருகிறது" என்றார். நிகழ்ச்சிக்கு ம.நடராஜன் தலைமை வகித்தார். ஈழக் கவிஞர் காசி ஆனந்தன், வழக்கறிஞர் அ.ராமமூர்த்தி, முனைவர் இரா. இளவரசு, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிபதி ராஜா, சுரேஷ்பிரேமசந்திரன், சிறிதரன் உள்ளிட்டோர் பேசினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in