

கணவர் கொல்லப்படும் காட்சிகள் 24 மணி நேரமும் என் நினைவில் இருந்து கொண்டே இருக்கிறது என்று, டாக்டர் சுப்பையாவின் மனைவி ஆனந்தி கண்ணீருடன் கூறினார்.
சென்னை பில்ரோத் மருத்துவமனை டாக்டர் சுப்பையா, நிலம் தொடர்பான பிரச்சினையால் 3 நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
அவரை கொலை செய்யும் வீடியோ காட்சிகள் எதிரே இருக்கும் அடுக்குமாடி குடியிருப் பில் வைக்கப்பட்டிருந்த கண் காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தன. டாக்ரை கொலை செய்த கூலிப்படையைச் சேர்ந்த 4 பேரை நான்கரை மாதங்களுக்கு பிறகு போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
இறந்த டாக்டர் சுப்பையாவுக்கு ஆனந்தி என்ற மனைவியும், சுவேதா, ஷிவானி என 2 மகள்களும் உள்ளனர். இவர்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இதுவரை யாரிடமும் கருத்து கூறாமல் இருந்த டாக்டர் சுப்பையாவின் மனைவி ஆனந்தி 'தி இந்து' தமிழ் நாளிதழுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:
எனது கணவர் துடிக்கத் துடிக்க கொலை செய்யுப்படும் காட்சிகளை நான் பார்த்தபோது எனது இதயத் துடிப்பே நின்றுவிட்டது. அழுவதை தவிர வேறொன்றும் என்னால் செய்ய முடியவில்லை. அந்த காட்சிகள் எனது நினைவுகளில் 24 மணி நேரமும் இருந்து கொண்டே இருக்கின்றன. அவர் நரம்பியல் மருத்துவராக இருந்து பலரின் உயிரைக் காப்பாற்றி இருக்கிறார். அவர் உயிருடன் இருந்திருந்தால் இன்னும் பலரது உயிர்களை காப்பாற்றி இருப்பார். துளியும் இரக்கம் இல்லாமல் அவரை கொன்றுவிட்டனர்.
கொலை யாளிகளை கைது செய்திருப்பது மகிழ்ச்சியை கொடுத்தாலும் எனக்கு வருத்தமே அதிகமாக இருக்கிறது.
கைதாகியுள்ளவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை, நிலத்துக்காக கொலை செய்யும் ஒவ்வொருவருக்கும் பாடமாக இருக்க வேண்டும்.
எனது கணவரை கொலை செய்தவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதற்காக காவல் துறையினர் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று ஆனந்தி கூறினார்.