Published : 15 Feb 2014 03:46 PM
Last Updated : 15 Feb 2014 03:46 PM

சாலைகள் பராமரிப்பை தனியாரிடம் விடும் திட்டத்தை கைவிட வேண்டும்: ராமதாஸ்

மாநில, மாவட்ட சாலைகளை பராமரிக்கும் பணியை தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "மக்கள் நலனை பாதுகாப்பதில் போட்டி போடாத மத்திய, மாநில அரசுகள், அரசின் சொத்துக்களைத் தனியாருக்கு தாரை வார்ப்பதில் மட்டும் போட்டி போடுகின்றன.

தேசிய நெடுஞ்சாலைகளை தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், அதற்கு போட்டியாக தமிழகத்தில் உள்ள மாநில, மாவட்ட சாலைகளின் பராமரிப்பை தனியாரிடம் வழங்க மாநில அரசு தீர்மானித்திருக்கிறது.

தமிழகத்தில் உள்ள மாநில மற்றும் மாவட்ட நெடுஞ்சாலைகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்த ஆசிய வளர்ச்சி வங்கி மிகப்பெரிய அளவில் கடன் வழங்குகிறது. இந்தத் தொகையைக் கொண்டு சாலைகளை மேம்படுத்தும் திட்டத்தை தமிழக அரசே செயல்படுத்தினால் சாலைகள் தரமாக இருக்கும்; அதற்கான செலவும் குறைவாக இருக்கும். ஆனால், மக்களின் நலனை விட தனியார் நிறுவனங்களின் நலனில் அதிக அக்கறை கொண்ட திராவிடக் கட்சிகளின் அரசுகள், சாலைகளை மேம்படுத்தி, பராமரிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைக்கத் துடிக்கின்றன.

சாலைப் பராமரிப்பை தனியார் மயமாக்குவதற்கான விதை கடந்த தி.மு.க. ஆட்சியில் தான் ஊன்றப்பட்டது. அப்போதே இத்திட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசும் சாலைகளின் மேம்பாட்டு மற்றும் பராமரிப்பு பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

தற்போது மாநில நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகள் தனியார் மயமாக்கப்பட்டால், மாநில சாலை பராமரிப்பில் மிக மோசமான விளைவுகள் ஏற்படும்.

சாலைகளின் பராமரிப்பு தனியாரிடம் விடப்பட்டால் ஏற்கனவே அந்தப் பணியை செய்து வரும் மாநில நெடுஞ்சாலைத்துறை செயலிழந்துவிடும்; அதில் பணியாற்றும் அதிகாரிகளும், பணியாளர்களும் வேலை இழப்பார்கள். சாலைப் பராமரிப்புப் பணியில் ஈடுபடும் தனியார் நிறுவனங்களுக்கு பொறுப்புடைமை இல்லை என்பதால் அவர்கள் சாலைகளை சரியாக பராமரிப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை.

இதுவரை சிறிய அளவில் ஒப்பந்தக்காரர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்த பராமரிப்பு பணிகள் இனி ஒரே நிறுவனத்திடம் ஒட்டுமொத்தமாக வழங்கப்படுவதால் ஊழல் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இதற்கெல்லாம் மேலாக, சாலை பராமரிப்பிற்கான தொகையை ஒரு குறிப்பிட்ட கால கட்டத்திற்கு மட்டுமே தமிழக அரசு வழங்கும். அதன்பின்னர், அந்தப் பணியை தனியார் நிறுவனங்களே மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால், அவர்கள் சாதாரண சாலைகளில் கூட சுங்கச் சாவடி அமைத்து சாலைகளை பயன்படுத்துவோரிடம் கட்டணம் வசூலிக்கும் ஆபத்து உள்ளது.

மராட்டியத்தில் நெடுஞ்சாலைகள் தனியார் மயமாக்கப்பட்டதை எதிர்த்து நடந்த போராட்டங்களில் பெருமளவில் வன்முறை வெடித்தது அனைவரும் அறிந்த ஒன்று தான். தமிழகத்தில் மாவட்ட சாலைகளும் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டால் தமிழகத்திலும் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

தமிழக நெடுஞ்சாலைத் துறை அனுபவம் மிக்கதாகும். பாம்பன் பாலம் உள்ளிட்ட கட்டுமானக் கலையின் அடையாளங்களாக திகழும் பல்வேறு முக்கியப் பாலங்கலையும், சாலைகலையும் அமைத்தது மாநில நெடுஞ்சாலைத்துறை தான். இதையெல்லாம் கருத்தில் கொண்டு, சாலைகளை பராமரிக்கும் பணியை தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்". இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x