Published : 21 Oct 2013 11:19 AM
Last Updated : 21 Oct 2013 11:19 AM

வீட்டுவசதி வாரிய நிலம் ஒதுக்கீடு விவகாரம்: வேதனை முடிவு.. முதல்வருக்கு வேண்டுகோள்

வீட்டுவசதி வாரிய நிலத்தை அடிமாட்டு விலைக்கு விற்பது தொடர்பாக வாரிய அதிகாரியும் உயர் அதிகாரியின் உறவினர் என்று சொல்லப்பட்டவரும் நடத்திய உரையாடல் தொடர்பான செய்தியை ஞாயிற்றுக்கிழமை 'தி இந்து' வில் வெளியிட்டிருந்தோம்.

அதற்கான வீடியோ பதிவில் இருக்கும் உரையாடல்களை தொகுத்துள்ளோம்.

வீட்டு வசதி வாரிய உதவி செயற்பொறியாளர் பழனிசாமி தனியார் பள்ளி நிர்வாகி பாலகுமாரிடம் பேசும்போது, "தனியார் பள்ளி கேட்டிருக்கும் இடத்தின் தற்போதைய மதிப்பு சதுர அடி ரூ.4 ஆயிரத்திலிருந்து 5 ஆயிரம் வரை போகிறது. உங்களுக்காக ரூ.3000 என மதிப்பிட்டுள்ளோம். நீங்கள் பேச்சுவார்த்தை நடத்தி முன்பணம் கொடுத்திருப்பதால், இந்த இடத்தை யாருக்கும் விற்கக்கூடாதுன்னு எம்.டி. (மேனேஜிங் டைரக்டர்) உத்தரவிட்டுள்ளார். சதுர அடிக்கு ரூ.2300ன்னு விலை குறிப்பிட்டு நீங்கள் விண்ணப்பம் அளித்தால் அதிலிருந்து 15 சதவீதம் அதிக விலை வைத்து உங்களுக்கு ஒதுக்கீடு செய்யமுடியும்.

இந்த நிலத்தை உங்களுக்கு முன்பே ஒதுக்கீடு செய்ய இருந்தோம். இது தொடர்பாக வீட்டு வசதி வாரியத் தலைவரை ஏன் பார்க்கவில்லை என நிர்வாக இயக்குநர் (எம்.டி.) கேள்வி எழுப்பியுள்ளார்"என்கிறார். அதற்கு பாலகுமார், "வாரியத் தலைவரை பார்த்தா, இன்னும் அதிகம் பேருக்கு பணம் கொடுக்க வேண்டியிருக்கும். தலைவருக்கு என்ன அதிகாரம் இருக்கு எனத் தெரியவில்லை. அமைச்சரையும் பார்த்துட்டோம். நிர்வாக இயக்குநரிடமும் பேசிவிட்டோம். இதுதொடர்பாக நிர்வாக இயக்குநர், வாரியத் தலைவரிடம் பேசமாட்டாரா?"என்கிறார்.

அதற்கு பதிலளிக்கும் பழனிசாமி, "நிர்வாக இயக்குநர் வாரியத் தலைவரிடம் பேசமாட்டார். அவர் அரசியல்வாதி. அவரும் இதில் பங்கு கேட்பார். தலைவரைப் பார்த்து விலையைக் குறைக்குமாறு கேளுங்க. நீங்கள் கேட்கும் நிலத்துக்கு போட்டி இல்லை. குறைத்து மதிப்பிடுமாறு கேளுங்கள்"என்கிறார். அவர் மேலும் கூறுகையில், "ஏற்கெனவே நீங்கள் கமிஷன் தொகை ரூ.4 லட்சம் கொடுத்திருக்கிறீர்கள். சதுர அடி விலையில் மாற்றம் இருப்பதால் அதில் சமரசம் செய்துகொள்ளலாம்.

ஆனால், வாரியத் தலைவர் அல்லது அமைச்சர் யாரோ ஒருவரை சந்தித்து நீங்கள் பேசவேண்டும். இந்த விஷயத்தில் ஒருவர் மற்றவரை பார்த்துக்கொள்வார். சதுர அடி ரூ.3 ஆயிரம் என்று நிர்ணயித்தால் மொத்தம் ரூ.7 கோடி உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் பள்ளிக்கூடம் நடத்தவேண்டாம். அந்த இடத்தை அப்படியே 10 கோடிக்கு விற்றுவிடலாம்"என்கிறார்.

இவ்வாறாக உரையாடல் நடந்துகொண்டிருக்கும்போது, வீட்டுவசதி வாரிய எம்.டி. செல்லமுத்துவின் மனைவி வழி உறவினர் (மைத்துனர்) எனக் கூறப்படும் (மற்றொரு) பழனிசாமி என்பவரும் அங்கு வருகிறார். அவர், "இந்த இடத்தை விற்க முடியலைன்னா, ஹவுசிங் போர்டே பில்டிங் கட்டப் போறாங்க. இதுதான் இப்போதைய பொசிஷன். விலையைக் குறைக்கறது சிரமம். உங்க விஷயத்தில் மினிஸ்டர் சைடில பிரச்சினை இருக்காதுன்னு ஏற்கெனவே சொன்னோம். சேர்மனைப் பார்க்கச் சொன்னோம். நீங்க பார்க்காததாலதான் தாமதம் ஆகுது" என்று கூறி விவரமாகப் பேசுகிறார்.

இப்படி நீண்டு கொண்டே போகிறது உரையாடல். இந்த விவகாரம் மட்டுமல்லாமல், வீட்டுவசதி வாரியத்தின் வேறு பல நிலங்கள் எப்படி ஒதுக்கீடு செய்யப்பட்டன என்பது குறித்த உரையாடல்களும் இடம்பெற்றுள்ளன.

இது தொடர்பாக பள்ளி நிர்வாகி பாலகுமாரை 'தி இந்து� நிருபர் தொடர்பு கொண்டபோது, "வீடியோ காட்சியில் உள்ள உரையாடல் நடந்தது உண்மை. இது தவிர வேறெதுவும் சொல்வதற்கில்லை" என்று ஒதுங்கிக்கொண்டார்.

"இந்த இடத்தை வாங்கிக் கொடுப்பது தொடர்பாக உதவி செயற் பொறியாளர் பழனிசாமி எங்கள் நிர்வாகியைச் சந்தித்துப் பேசினார். செல்லமுத்துவின் மைத்துனரும் பேசினார். நான்கு லட்சம் கைமாறியது. பணத்தையும் வாங்கிட்டு காரியத்தையும் முடிச்சுக் குடுக்கல. குடுத்த பணத்தையும் திருப்பித் தரல" என்கிறார்கள் அந்த தனியார் பள்ளியை அறிந்த வட்டாரத்தில்.

ஈரோடு வீட்டுவசதி வாரிய உதவி செயற்பொறியாளர் பழனிசாமியிடம் பேசியபோது, "நிலத்தை வாங்குவது தொடர்பாக பள்ளி நிர்வாகத்தில், என்னிடம் விசாரித்தார்கள். சத்தியமா நான் டீல் பேசவே இல்லை. கேட்டதற்கு பதில் சொன்னேன். அதை பதிவு செஞ்சு வைச்சிக்கிட்டு மிரட்டுறாங்க. அந்த பழனிசாமியை எம்.டி. உறவினர்னுதான் பேசிக்கிறாங்க. பள்ளி நிர்வாகத்திலிருந்துதான் அவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைச்சாங்க" என்றார்.

செல்லமுத்துவின் உறவினர் என அறிமுகப்படுத்தப்படும் பழனிசாமியோ, "நிர்வாக இயக்குநர் எனது உறவினர்தான். அவரிடம் பேசி, நிலத்தை வாங்கித் தருமாறு பள்ளி நிர்வாகம் என்னிடம் கேட்டது. நான் முடியாதுனு சொல்லிட்டேன்.

பள்ளி நிர்வாகத்தோட வேற வரவு செலவு இருந்துச்சு. அதையும் செட்டில் பண்ணி, எழுதி வாங்கி வைச்சிருக்கேன்" என்றார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தை அடுத்த புலவக்காளிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த நல்லசாமியின் மகன் பழனிசாமி (48). திருமணமான இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

ஈரோடு சம்பத் நகரில் குடியிருந்துவந்த பழனிசாமி, ஈரோடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராகப் பணிபுரிந்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் அலுவலகம் சென்று வருவதாக மனைவி பரமேஸ்வரியிடம் கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்ட பழனிசாமி, பெரியார் நகர் பகுதியில் வீட்டு வசதி வாரிய ஆவணங்களை வைத்திருக்கும் அலுவலகத்துக்கு சென்றுள்ளார்.

நீண்ட நேரம் ஆகியும் பழனிசாமி வீடு திரும்பாததையடுத்து அவரது அலுவலக ஊழியர்கள் சிலருக்கு அவருடைய மனைவி பரமேஸ்வரி தகவல் தெரிவித்துள்ளார். அவரது அலுவலக ஊழியர்கள் சிலர், அலுவலகத்துக்குச் சென்று பார்த்தபோது பழனிசாமி அங்கு இல்லை. இதையடுத்து ஆவண காப்பக அறைக்குச் சென்று பார்த்தபோது, அதன் கதவு உள்புறமாக தாழிடப்பட்டிருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பழனிசாமி தூக்கிட்டு இறந்த நிலையில் இருந்தார்.

வேதனை முடிவு.. முதல்வருக்கு வேண்டுகோள்

வீடியோ பதிவு உரையாடல் தொடர்பான ஆதாரங்கள் வெளியான நிலையில், வேதனையான ஒரு சம்பவம் நடந்துள்ளது. வீட்டு வசதி வாரிய அதிகாரியான பழனிசாமி, ஞாயிற்றுக்கிழமை மாலை அலுவலக வளாகத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். 'நான் குற்றமற்றவன் என்று நிரூபிக்க வேறு வழி தெரியவில்லை' என்று அவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

பழனிசாமியின் தற்கொலைக்கான நெருக்கடி குறித்து போலீஸார் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். வீட்டு வசதி வாரியத்தின் உச்சபட்ச அதிகாரத்தில் இருப்பவர்கள் சார்பில் பழனிசாமி நடத்திய பேரம் தொடர்பான தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, அவருக்கு கடுமையான நெருக்கடி உண்டாகியிருக்கலாம் என்றும் அதைத் தொடர்ந்து அச்சம் காரணமாகவே அவர், தற்கொலை செய்துகொண்டிருப்பார் என்றும் போலீஸார் கருதுகின்றனர்.

’வீட்டு வசதி வாரியத்தில் மட்டுமல்ல.. அரசின் முக்கியமான பல துறைகளில் மேலிடத்தில் உள்ளவர்களுக்கு கருவி யாக செயல்படும் இதுபோன்ற பல அதிகாரிகளும் இதேபோன்ற அரசியல் நெருக்கடி அச்சத்தில் ஆழ்ந்திருப்பதுதான் உண்மை. ஊழல் அம்பலமாகும்போது கீழ்மட்டத்தில் உள்ள அதிகாரிகள்தான் பலிகடா ஆக்கப்படுகிறார்கள்.

எனவே குறிப்பிட்ட இந்த நில பேர விவகாரத்தின் முழு பின்னணியையும் அரசாங்கம் தலையிட்டு விசாரிக்க வேண்டும்.

இதுபோன்று தமிழ்நாடு முழுவதும் வாரிய நிலத்தை அடிமாட்டு விலைக்கு விற்பதற்கு எங்கெல்லாம் பேரம் நடத்துள்ளது என்ற விவரங்களை கண்டுபிடிக்க வேண்டும். இதற்கு முக்கிய காரணமானவர்களை முதல்வர் தலையிட்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்’ என்று வேண்டுகோள் வைக்கிறார்கள் வீட்டு வசதி வாரிய ஊழியர்கள்.

('தி இந்து' நாளிதழுக்கு கிடைத்த வீடியோ ஆதாரம் மற்றும் செய்தியின் அடிப்படையில் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் உள்ளதை உள்ளபடி நேற்று பிரசுரித்தோம். இந்த விஷயத்தில் அதிகாரி பழனிசாமி எடுத்த முடிவு சற்றும் எதிர்பாராதது. மிகவும் வேதனைக்குரியது).

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x