

தமிழகத்தில் கன மழை காரணமாக உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு கூடுதலாக 1 லட்சம் ரூபாய் தொகையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் மழை வெள்ள நிவாரணப் பணிகளை மேலும் முடுக்கிவிடும் வகையில், இன்று (செவ்வாய்க்கிழமை) தலைமைச் செயலகத்தில் ஓர் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை குறித்தும், அதன் காரணமாக ஏற்பட்டுள்ள மனித உயிரிழப்புகள் குறித்தும், கால்நடை உயிரிழப்புகள் குறித்தும், சேதமடைந்துள்ள குடிசைகள் மற்றும் பயிர்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வடகிழக்கு பருவமழை காரணமாக இந்த ஆண்டு இதுவரை 204.5 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது என்றும், இது இயல்பாக பெறும் மழை அளவான 151 மில்லி மீட்டருடன் ஒப்பிடும்போது 35 விழுக்காடு அதிகம் என்றும், தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களில் 28 மாவட்டங்களில் கூடுதலாக மழை பெய்துள்ளது.
கன மழை காரணமாக மின்சாரம் தாக்கியும், இடி மற்றும் மின்னல் தாக்கியும், சுவர் இடிந்து விழுந்தும், வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டும் இதுவரை 30 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்த கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மேலும் 1 லட்சம் ரூபாயினை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
இந்தப் பெருமழைக்கு 108 கால்நடைகள் பலியாகின. இவற்றில் மாடுகளை இழந்த உரிமையாளர்களுக்கு 20,000 ரூபாய் நிவாரணத் தொகையும், ஆடுகளை இழந்த உரிமையாளர்களுக்கு 2,000 ரூபாய் நிவாரணத் தொகையும், கோழிகளை இழந்த உரிமையாளர்களுக்கு 100 ரூபாய் நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது.
பெருமழைக்கு இதுவரை 250 குடிசை வீடுகள் முழுமையாகவும், 623 குடிசை வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன.
முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு 5,000 ரூபாய் நிவாரணத் தொகையும், பகுதியாக சேதமடைந்த குடிசைகளுக்கு 2,500 ரூபாய் நிவாரணத் தொகையும் வழங்க அதிகாரிகளுக்கு ஏற்கெனவே உத்தரவிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர, வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு அரிசி, வேட்டி-சேலை, மண்ணெண்ணெய் ஆகிய பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன.
கனமழை காரணமாக, சில இடங்களில் பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளதாக இந்த ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. வெள்ள நீர் வடிந்த பிறகே பயிர்ச் சேதம் குறித்து சரியாக ஆய்வு செய்ய இயலும் என்பதால், வெள்ள நீர் வடிந்த பின் ஆய்வு செய்து அறிக்கை அனுப்புமாறு அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சாலைகளைப் பொறுத்த வரை, கனமழை காரணமாக, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 797 சாலைகளில் 3070 இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இவற்றில் 2505 இடங்களில் உள்ள பள்ளங்கள் செப்பனிடப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள பள்ளங்களை செப்பனிடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பிற மாவட்டங்களைப் பொறுத்த வரையில் 4,765 நீளச் சாலைகள் கனமழையில் சேதமடைந்துள்ளது. அவற்றை செப்பனிடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வடகிழக்கு பருவமழையினால் பாதிக்கப்பட்ட சாலைகளை செப்பனிடவும், குளம் குட்டைகளைச் சீரமைக்கவும் 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
இந்த ஆண்டு இறுதி வரை வடகிழக்கு பருவமழை நீடிக்க வாய்ப்பு உள்ளதால், மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து பாதுகாப்பு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
எந்த ஒரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் அரசு இயந்திரம் தயாராக உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்