

செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி, அதிக விலைக்கு மணல் விற்கப்படுவதால், தமிழகம் முழுவதும் ரூ.28 ஆயிரம் கோடி மதிப்பிலான கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளன என்று சென்னை கட்டுமானப் பொறியாளர்கள் சங்கம் கூறியுள்ளது.
இதுகுறித்து சென்னை கட்டுமானப் பொறியாளர்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவர் கே.வெங்கடாசலம், சனிக்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:
மணல் விலை நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே போவதால் கட்டுமானத் தொழில் ஸ்தம்பித்துள்ளது. கடந்த ஆண்டு ஒரு கனஅடி மணல்
ரூ.25-க்கு விற்றது. இப்போது ரூ.80-க்கு விற்கப்படுகிறது. ரூ.15 ஆயிரத்துக்கு விற்ற ஒரு லோடு மணல், தற்போது ரூ.45 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது.
செயற்கை தட்டுப்பாடு
சாதாரண லாரியில் ஒரு லோடு (400 கனஅடி) மணலுக்கு அரசு நிர்ண யித்துள்ள விலை ரூ.1,300. லாரி வாடகை, டீசல் விலை உயர்வு, டோல் கேட், டிரைவர் பேட்டா என எல்லா செலவுகளையும் சேர்த்தால்கூட அதிகபட்சம் ரூ.12 ஆயிரத்துக்கு மேல் போக வாய்ப்பில்லை. ஆனால், செயற்கையாக மணல் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளனர். இதன்மூலம் மணல் வாங்க 4, 5 நாட்கள் வரை காத்திருப்பதாக கூறி அதற்கான லாரி வாடகையை கணக்கிட்டு ஒரு லோடு மணலை ரூ.40 ஆயிரத்தில் இருந்து ரூ.45 ஆயிரம் வரை விற்கின்றனர்.
தனித்துறை
இதற்கிடையே, தமிழக அரசின் அதிரடி நடவடிக்கையால் மணல் மாபியாக்கள் விரட்டப்பட்டு, முதல்முறையாக காஞ்சிபுரத்தில் அரசு சார்பில் நேரடியாக மணல் விற்கப்படுகிறது. இதுபோல தமிழகம் முழுவதும் அரசு நேரடியாக மணல் விற்பனை செய்யவேண்டும். வருமானத்தை அள்ளித்தரும் மணல் விற்பனைக்காக அரசு தனித் துறையை உருவாக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் விலை நிர்ணயக் குழு அமைக்க வேண்டும் அல்லது மணல் வாரியத்தை அமைத்து விற்பனையை ஒழுங்குபடுத்த வேண்டும்.
மணல் விலை உயர்வால் தமிழகத்தில் கட்டுமானத் தொழிலை நம்பியுள்ள 20 ஆயிரம் பொறியாளர்கள், 10 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மணல் பிரச்சினை காரணமாக மாநிலம் முழுவதும் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான கட்டுமானப் பணிகளும், சென்னையில் ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான கட்டுமானப் பணிகளும் முடங்கியுள்ளன. இந்தப் பிரச்சினைக்கு போர்க்கால அடிப் படையில் அரசு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு வெங்கடாசலம் கூறி னார். பேட்டியின்போது, சங்கச் செயலாளர் சிதம்பரேஷ், இணைப் பொருளாளர் கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.