

விருதுநகர் மாவட்டத்திலுள்ள 26 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என்ற அதிச்சித் தகவல் ஆய்வுக் கூட்டத்தில் வெளியானது.
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் குறித்து தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் தலைமையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில், பள்ளிகளில் மாணவர்களுக்குப் போதிய அளவில் கழிப்பறை வசதிகள் உள்ளனவா என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, விருதுநகர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 344 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 21 உயர்நிலைப் பள்ளிகளிலும், 5 மேல்நிலைப் பள்ளிகளிலும் கழிப்பறை வசதிகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதேபோன்று, ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் இல்லை என்பது தெரிவிக்கப்பட்டது.
மேலும், கழிப்பறைகள் இல்லாத பள்ளிகளில் பெற்றோர்- ஆசிரியர் சங்கங்கள் மூலமாகமோ, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் நிதி உதவி பெற்றோ, அரசியல் பிரமுகர்கள் மற்றும் உள்ளூர் பிரதிநிதிகள் மூலமாகவோ நிதி உதவிகளைப் பெற்று கழிப்பறைகள் அமைக்க அறிவுறுத்தப்பட்டது.
சிறப்பு நிதிகளைப் பெற்று கழிப்பறை வசதி ஏற்படுத்தாத பள்ளிகளில் உடனே கழிப்பறை வசதி ஏற்படுத்தவும், பள்ளிகளில் போதிய பராமரிப்பின்றி பயன் படுத்த முடியாமல் உள்ள கழிப்பறைகளை சீரமைத்து அவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சி களை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.