Published : 19 Sep 2016 09:36 AM
Last Updated : 19 Sep 2016 09:36 AM

பழுதடைந்த சாலை, வழிந்தோடும் கழிவுநீர், கொசு தொல்லை: 105-வது வார்டு மக்கள் பாதிப்பு

மழைநீர் தேக்கம், கழிவுநீர் வழிந்தோடுவதால் கொசுத் தொல்லை, குண்டும் குழியுமான சாலை, அடிக்கடி மின்விநியோகம் பாதிப்பு என நீண்ட காலமாக 105-வது வார்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து உங்கள் குரல் சேவை வழியாக வாசகர் இ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

105-வது வார்டில் உள்ள மேட்டுத் தெரு, ஈ.வே.ரா. பெரியார் தெரு, கலைஞர் தெரு, அஞ்சுகம் தெரு, நாவலர் தெரு, பாரதிதாசன் தெரு, பூம்புகார் தெரு போன்றவற்றில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, அவ்வப்போது கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் சுகாதாரக் கேடும், கொசுத் தொல்லையும் நீண்டகாலமாக இருந்து வருகிறது. இதனால் இத்தெருக்களில் வசிக்கும் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

முன்பு 10 குடும்பங்கள் இருந்த இடத்தில் இப்போது 20, 30 குடும்பங் கள் வாழ்கின்றன. இதனால் மின்சார பயன்பாடும் அதிகரித்துள்ளது. அதற்கேற்ப மின்மாற்றிகள், அதிக திறன் கொண்ட ஒயர்கள் மாற்றப்படாததால் அடிக்கடி மின்விநியோகம் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து புகார் கொடுத்தாலும் உடனடியாக சீராவதில்லை. சில மணி நேரம் கழித்தே சரி செய்யப்படுகிறது.

மேற்கண்ட தெருக்களில் மழை நீர் கால்வாய் அமைக்கப்படாததால் சற்று பலத்த மழை பெய்தால்கூட 4 நாட்கள் வரை மழைநீர் தேங்குகிறது. இதனால் சாலைகள் பழுதடைந்து குண்டும், குழியுமாகிவிடுகிறது. இதுகுறித்து வார்டு உறுப்பினர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலனில்லை என்றார் ராதாகிருஷ்ணன்.

இதுகுறித்து 105-வது வார்டு உறுப்பினர் வ.சுகுமார்பாபுவிடம் கேட்டபோது, “மேட்டுத் தெரு, அஞ்சுகம் தெரு, கலைஞர் தெரு, பூம்புகார் தெரு ஆகிய தெருக்கள் குறுகலாக இருப்பதால் அங்கே மழைநீர் கால்வாய் அமைக்க இயலாது. மின் விநியோக பாதிப்பைக் குறைக்கும் வகையில் புதிதாக மின்மாற்றிகள் அமைக்க இடம் கிடைக்கவில்லை. தரையை ஒட்டியுள்ள மின் இணைப்புப் பெட்டிகளை உயர்த்திய நிலையில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 1980-ல் குடிசைப் பகுதியாக இருந்தபோது அமைக்கப்பட்ட கழிவுநீர் குழாய்கள் என்பதால் கழிவுநீர் வழிந்தோடும் பிரச்சினை உள்ளது. இப்பிரச்சினையை உடனுக்குடன் தீர்ப்பதுடன், பெரிய குழாய் பதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x