

சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தை அரசின் கட்டுப்பாட்டில் வைக்க தேவையான நடவடிக்கைகளை, தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று அறிக்கையில், "சிதம்பரம் நடராஜர் கோயில் பிரச்சினை நீண்ட காலமாக நீதிமன்ற வழக்குகளில் நீடித்து வருகிறது. கோவிலுக்கான நிலம், சொத்துகள், நகைகள் மற்றும் பக்தர்களிடம் அன்றாடம் வரும் வருமானம் ஆகியவற்றை, தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர, நூறாண்டுகளுக்கு மேலாக அரசு நடவடிக்கை மேற்கொள்கிறது.
ஆனால், இத்தகைய முயற்சிகளை இழுத்தடித்து, தங்களது கட்டுப்பாட்டிலேயே வைத்துக் கொள்ள நீதிமன்றங்களை பொது தீட்சிதர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் தீட்சிதர்கள் தொடர்ந்த வழக்கில், வாதங்கள் முடிந்துள்ளன. இந்த வழக்கில் தமிழக அரசு போதுமான அழுத்தம் தர வேண்டும்.
இந்தக் கோயில், அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால் தான், அதன் சொத்துகள், கோயில் பாரம்பரியம் ஆகியவற்றை பாதுகாக்க முடியும். எனவே, கோயில் நிர்வாகம் தொடர்ந்து அரசின் கட்டுப்பாட்டில் நீடிக்க தேவையான நடவடிக்கைகளை, தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்" என்று ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.