

மேகதாது அணை பிரச்சினைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக ஆளுநர் ரோசய்யா பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி முடிவடைவதை அடுத்து, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சங்கரமூர்த்தையை தமிழக ஆளுநராக நியமித்தால் காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழகத்திற்கு சிக்கலான சூழ்நிலை உருவாகும் என எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
அதேபோல் காவிரி நதி நீரை தமிழகத்திற்கு திறந்து விடாததால் தமிழக விவசாயிகளுக்கு ஏற்பட்ட சுமார் ரூ.2500 கோடி நஷ்ட ஈட்டை தரக்கோரி, தமிழக அரசு கடந்த 2013-ம் ஆண்டு தாக்கல் செய்த சூட் மனுவை சில தினங்களுக்கு முன் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த உச்ச நீதிமன்ற நீதிபதி கோபால் கவுடா அடங்கிய அமர்வு, விசாரிப்பதற்கு தமிழக அரசு ஏன் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பதை தமிழக முதல்வர் ஜெயலலிதா பாதிக்கப்பட்ட தமிழக விவசாய மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதேபோல் சுதந்திர தின உரையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மேகதாதுவில் ஆணை கட்ட போவதை உறுதி செய்யும் போக்கில் அவரது உரையில் ரூ.5400 கோடி இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளதையும், அதேபோல் 400 மெகாவாட் மின்சாரத்தை இதன் மூலம் உற்பத்தி செய்ய போவதாகவும் அறிவித்துள்ளது வெந்த புண்ணில் வேலை பாய்த்தது போல் தமிழக விவசாயிகளின் நிலை மாறியுள்ளது.
இதற்கு மாறாக தமிழக முதல்வரின் சுதந்திர தின உரையில் மக்களுக்கு வேண்டிய, இதுபோல் ஆக்கபூர்வமான உரையை அளிப்பதற்கு பதிலாக, எப்போதும் நான், எனது, எனது தலைமையிலான ஆட்சியில் என்று தற்பெருமை பேசும் உரையாகவே இருந்தது.
கர்நாடக அரசின் இந்த அறிவிப்பை கண்டிருக்கும் விதத்தில் அதிரடியாக தமிழக விவசாயிகளின் நலனில் முழு அக்கறை கொண்டு, அனைத்து கட்சியையும் ஒன்று கூட்டி பிரதமரை நேரில் சந்தித்து இந்த மேகதாது அணை பிரச்சனைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்ற பழமொழிக்கு ஏற்ப தமிழக விவசாயிகளுக்கு, இந்த மேகதாது அணை பிரச்சினை ஆகிவிடும்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.