ஸ்கூட்டரில் மகளுடன் சென்ற பெண்ணிடம் கத்தி முனையில் 27 பவுன் கொள்ளை: போலீஸிடமும் செல்போன் பறித்த வழிப்பறி கொள்ளையர்கள்

ஸ்கூட்டரில் மகளுடன் சென்ற பெண்ணிடம் கத்தி முனையில் 27 பவுன் கொள்ளை: போலீஸிடமும் செல்போன் பறித்த வழிப்பறி கொள்ளையர்கள்
Updated on
1 min read

கொளத்தூரில் ஸ்கூட்டரில் மகளு டன் சென்ற பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 27 பவுன் நகைகளை பறித்து சென்றனர்.

சென்னை முகப்பேரில் வசிக்கும் ஜீவரத்தினத்தின் மனைவி பரிமளம். இவர் நேற்று முன்தினம் மாலை மாதவரத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுவிட்டு மகளுடன் மோட்டார் சைக்கிளில் இரவு 9 மணி அளவில் திரும்பி வந்து கொண்டிருந்தார். மகள் மோட்டார் சைக்கிளை ஓட்டினார்.

கொளத்தூர் செந்தில் நகர் தாதான்குப்பம் பகுதியில் 200 அடி சாலையில் இவர்கள் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ஸ்கூட்டரை வழிமறித்தனர். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி, பரிமளமும் அவரது மகளும் அணிந்திருந்த 27 பவுன் நகைகளை பறித்துச் சென்றுவிட்டனர்.

இதுகுறித்து ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க அண்ணாநகர் துணை ஆணையர் பெரோஸ்கான் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து வில்லிவாக்கம் உதவி ஆணையர் தனவேல், ராஜமங்கலம் காவல் ஆய்வாளர் கோபிநாத் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள். மின் விளக்குகள் இல்லாததை பயன்படுத்திக் கொண்டு வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். அந்த இடத்தில் உடனடியாக மின் விளக்குகள் வைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் ஏட்டாக இருப்பவர் பாலன். நேற்று முன்தினம் இரவு மெரினாவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று அதிகாலை 4 மணி அளவில் டிஜிபி அலுவலகம் அருகே மெரினா கடற்கரை சாலையில் செல்போனில் பேசிக்கொண்டு நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் பாலனின் செல்போனை பறித்து சென்றுவிட்டனர்.

இதுகுறித்து மெரினா காவல் நிலையத்தில் பாலன் புகார் செய்தார். காக்கி சீருடையில் இருந்த போலீஸிடமே துணிச்சலாக செல்போனை பறித்து சென்றுள்ளனர். அந்த நபர்களை பிடிக்கும் முயற்சியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in