

ஏரி, குளங்கள் அரசியல்வாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக பேரவையில் குற்றம்சாட்டப்பட்டது.
புதுச்சேரி சட்டப்பேரவையில் நேற்று நடந்த விவாதம்:
அன்பழகன் (அதிமுக): புதுச்சேரியில் எத்தனை ஏரி குளங்கள் உள்ளன? இதில் தூர்வாரப்பட்டவை எத்தனை?
அமைச்சர் நமச்சிவாயம்: புதுச்சேரியில் 84 ஏரிகள், 720 குளங்கள் உள்ளன. தண்ணீரை தேக்கி வைக்க 77 நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
அன்பழகன்: புதுச்சேரி பிராந்தியத்தில் மட்டும் 600 குளங்கள் இருந்தன. தற்போது பெரும்பாலானவை இல்லை. ஒரு சில அரசியல்வாதிகள் பிளாட் போட்டுள்ளனர். அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
அமைச்சர் நமச்சிவாயம்: ஏரி, குளம் ஆக்கிரமிப்பு அரசு ஆட்சிக்கு வந்த பிறகு இல்லை. ஆக்கிரமிப்பு குளங்களை கண்டறிந்து தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.
அன்பழகன்: அரசு பாதுகாக்க வேண்டும். குளங்களை தூர்வாருவதில்லை.
நமச்சிவாயம்: கரைக்கட்ட நிதியில்லை. தூர்வாரலாம்.
அன்பழகன்: ஆளுநர் சொன்னதால்தான் இப்பணியை செய்கிறீர்களா?
நமச்சிவாயம்: மத்திய அரசு நிதி பெற்று நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஏரி குளங்களை அரசு சார்பு நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் செய்கிறோம்.
அன்பழகன்: நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு உதவுங்கள்.
தனவேலு: 82 குளங்கள் எங்கள் தொகுதியில் உள்ளது. சில ஊர்களில் குடிநீராக இருந்தது. நீர்நிலைகள் ஆக்கிரமித்துள்ளது. தூர்வாரவில்லை.
அனந்தராமன்: அபிஷேகப்பாக்கம் ஏரியில் நீர் வரத்து ஷட்டர் உடைந்துள்ளது.
நமச்சிவாயம்: ஷட்டர் சரி செய்ய நிதி உள்ளது. வேளாண்துறை மூலம் தூர்வாருகிறோம். மீதியுள்ள குளங்கள் தூர்வாரப்படும். வண்டல் மண் விவசாயிகள் எடுக்க அனுமதி தரப்பட்டுள்ளது. பயன்படுத்தலாம்.
அனந்தராமன்: கொம்யூன் பஞ்சாயத்து, பொதுப்பணித்துறை என பலரிடம் அனுமதி பெறவேண்டியுள்ளது. அதை மாற்றுங்கள்.
கீதா: காரைக்காலில் விவசாயிகள் தூர்வார அனுமதி தாருங்கள்
நமச்சிவாயம்: ஆலோசனை ஏற்று செயல்படுத்தப்படும்.