

தொழிற்சங்க நிர்வாகிகளுடன் போக்குவரத்துத்துறை அமைச் சர் பல்லவன் இல்லத்தில் நேற்று நடத்திய இறுதிக்கட்ட பேச்சுவார்த் தையும் தோல்வியில் முடிந்தது. இதனால் சில இடங்களில் அரசு பேருந்துகளின் சேவை திடீரென நிறுத்தப்பட்டது.
தமிழ்நாடு அரசு போக்குவரத் துக் கழகங்களில் பணியாற்றும் 1 லட்சத்து 43 ஆயிரம் ஊழியர் களுக்கு 13-வது புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துதல், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ரூ.1,700 கோடி நிலுவை தொகை, மாதந் தோறும் ஓய்வூதியம் வழங்க ரூ.100 கோடி வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 முக்கிய கோரிக்கைகள் குறித்து நிர்வாகத்துடன் நடந்த 4 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
பின்னர், தொழிலாளர் நலத் துறை தனி ஆணையர் யாஸ்மின் பேகம் முன்னிலையில் போக்குவரத்து துறை நிர்வாகம் மற்றும் தொழிற் சங்கங்களுடன் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையிலும் முன்னேற் றம் ஏற்படவில்லை. பிறகு போக்கு வரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் சின்னசாமி ஆகியோர் முதல்வருடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர்.
அடுத்ததாக, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் தலைமையில் தொழிற் சங்க நிர்வாகிகளுடன் பல்லவன் இல்லத்தில் நேற்று பேச்சு வார்த்தை நடந்தது. இதில், போக்குவரத்துத்துறை செயலர் சந்திரகாந்த் பி.காம்ப்ளே, மாநகர போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, போக்குவரத்துத்துறை தனி அலுவலர் கோவிந்தராஜ் உட்பட 8 பேரும், தொழிற்சங்கங்கள் தரப்பில் மு.சண்முகம் (தொமுச), அ.சவுந்தரராஜன் (சிஐடியு) ஜெ.லட்சுமணன் (ஏஐடியுசி) உட்பட 11 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மதியம் 12 மணி முதல் மாலை 5.30 மணி வரையில் 2 கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால், திட்டமிட்டபடி 15-ம் தேதி (இன்று) காலவரையற்ற வேலை நிறுத்தம் நடக்கும் என தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்தனர்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து வேலைநிறுத்தம் நேற்று மாலையி லிருந்து சில இடங்களில் தொடங் கியது. சில மாவட்டங்களிலும், சென்னையில் பூந்தமல்லி, மந்த வெளி, சைதாப் பேட்டை உள் ளிட்ட இடங்களிலும் சில பேருந்து கள் நிறுத்தப்பட்டன.
இது தொடர்பாக தொமுச பொதுச் செயலாளர் மு.சண்முகம் கூறும்போது, ‘‘போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, ஓய்வுக்கால பலன் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அமைச்சர் முன்பாக பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, போக்கு வரத்துத் துறையை ஒரு சேவை துறையாக கருதி அதில் ஏற்படும் இழப்புகளை அரசே ஏற்று தொழி லாளர்களுக்கு வழங்கக் கூடிய அனைத்து பலன்களையும் எந்த வித தடையும் இன்றி வழங்கு வதற்கு உத்தரவாதம் அளித்தால் ஒழிய வேலை நிறுத்தத்தை திரும்பப் பெற முடியாது என தெரிவித்தோம். அதற்கு அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லாததால் திட்டமிட்டபடி வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும்’’ என்றார்.
இது தொடர்பாக சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராஜன் கூறும்போது, ‘‘ஏற்கெனவே வழங்கிய ரூ.750 கோடிக்கு மேல், ரூ.500 கோடியை அடுத்த செப்டம்பரில் தருகிறோம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் கடைசியாக கூறினார். இந்த தொகை மூலம் தொழிலாளர் களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவையே முழுமையாக தர முடியாது. போக்குவரத்துக் கழகத்தின் முக்கிய பிரச்சினை யான வரவுக்கும், செலவுக்கும் இருக்கும் வேறுபாட்டை நீக்க வேண்டும். அதற்கு ஒரு கொள்கை முடிவை அரசு அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதற்கு அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை. எங்கள் கடனில் ஒரு பகுதியை மட்டும் அளிப்போம் என்ற அறிவிப்பை மட்டும் வைத்து வேலை நிறுத்தத்தை திரும்பப் பெற இயலாது. அண்ணா தொழிற்சங்க ஊழியர்கள் உட்பட அனைத்து தொழிற்சங்கங்களும் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்பார்கள். போராட்டத்தில் கலந்துகொள்ள மாட்டோம் என எந்த தொழிற்சங்கமும் எங்களிடம் கூறவில்லை’’ என்றார்.