ஈரான் கடற்படையால் கைதான தமிழக மீனவர்கள் விடுதலை

ஈரான் கடற்படையால் கைதான தமிழக மீனவர்கள் விடுதலை
Updated on
1 min read

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ஈரான் நாட்டு கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 15 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் ராமகிருஷ்ணன், கண்ணன், முனுசாமி, பாண்டி, சின்னையா, ராசு, மற்றொரு கண்ணன், தங்கசெல்வம், லிங்கேஸ்வரன், பாலமுருகன், ராஜேந்திரன், மரியச்செல்வம், குப்புசாமி, லூயிஸ், நந்து குமார் ஆகிய 15 பேர் கடந்த ஆண்டு துபாய்க்கு மீன்பிடி தொழிலுக்காக சென்றனர். அங்கு ஒரு தனியார் மீன் பிடி நிறுவனத்தில் சேர்ந்தனர். இவர்கள் கடந்த டிசம்பர் மாதம் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஈரான் கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 15 பேரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். அதைத் தொடர்ந்து மத்திய வெளியுறவு துறை அதற்கான நடவடிக்கைகளை எடுத்தது. ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்களை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

மத்திய அரசின் நடவடிக்கையால் தமிழக மீனவர்கள் 15 பேரையும் கடந்த மே மாதம் 28-ம் தேதி ஈரான் விடுதலை செய்தது. அவர்களை துபாயில் உள்ள இந்திய தூதரகத்திற்கும் அனுப்பி வைத்தது. அதைத் தொடர்ந்து 15 தமிழக மீனவர்களும் துபாயில் இருந்து நேற்று காலை விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று அழைத்து சென்றனர். பின்னர் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து, சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in