

திருச்சி பெரியார் ஈவெரா கல்லூரியில் இருந்த 75 ஆண்டுகால ஆலமரத்தின் பெரும்பகுதி முறிந்து விழுந்தது. மீதமுள்ள பகுதிகளை பாதுகாக்க முன்னாள் மாணவர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
திருச்சி காஜாமலையில் உள்ள பெரியார் ஈ.வெ.ரா கல்லூரியின் மையப்பகுதியில் சுமார் 75 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலமரம் உள்ளது. முற்றிலும் காய்ந்த நிலையில் இருந்த இதன் பெரும்பகுதி மரக் கிளைகள் கடந்த 5 நாட்களுக்கு முன் முறிந்து விழுந்தன. மேலும், சில கிளைகள் பட்டுப்போன நிலையில் காணப்படுகின்றன.
இதையறிந்த கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் அங்குசென்று பார்வையிட்டனர். அதைத்தொடர்ந்து முன்னாள் மாணவர் சங்க புரவலரும், திமுக மாநிலங்களவை எம்.பி.யுமான திருச்சி சிவா, பொதுச்செயலாளர் செந்தில்ராஜன், பொருளாளரும், தேமுதிக தெற்கு மாவட்டச் செயலாளருமான கிருஷ்ணகோபால் மற்றும் ஏராளமான முன்னாள் மாணவர்கள் நேற்று முன்தினம் அங்கு சென்று முறிந்துகிடந்த மரக்கிளைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், மீதமுள்ள மரத்தை பாதுகாப்பு டன் வளர்ப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். அதைத்தொடர்ந்து, லாரி மூலம் கொண்டு வரப்பட்ட 8 ஆயிரம் லிட்டர் தண்ணீர் ஆலமரத்துக்கு ஊற்றப் பட்டது.
இதுகுறித்து திருச்சி சிவா எம்.பி கூறும்போது, “கல்லூரி தொடங்குவதற்காக பெரியார் தனக்கு சொந்தமான இந்த நிலத்தை அரசிடம் ஒப்படைத்தபோதே இந்த ஆலமரம் இருந்தது. அன்றிலிருந்து, இன்றுவரை இங்கு பயின்ற, பயிலும் மாணவர்களின் அன்றாட வாழ்வில் இந்த ஆலமரத்துக்கு நெருக்கமான தொடர்பு உண்டு. ஒவ்வொரு முன்னாள் மாணவருக்கும் இந்த மரத்தின்மீது மிகப்பெரிய பற்றுதல் உண்டு. இந்த ஆல மரத்தின் பெரும்பகுதி தற்போது முறிந்து விழுந்தது வேதனையளிக்கிறது. மீதமுள்ள மரத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் வேளாண் துறை அதிகாரிகளை அழைத்து வந்து ஆய்வு செய்தோம். அப்போது, பட்டுப்போன சில கிளைகளை முற்றிலும் அகற்றிவிட்டு, நுண்ணுயிர் உரங்களை பயன்படுத்தி மீதமுள்ள பகுதிகளை மீட்டெடுப்பது குறித்து ஆலோசனை தெரிவித்தனர். அதற்கான பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றார்.