

அந்நிய செலாவணி வழக்குகளில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி வி.கே.சசிகலா தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சசிகலா, தினகரன் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் வழக்கை சந்திக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா (அதிமுக பொதுச் செயலர்), மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் மீது 1996-ம் ஆண்டில் அந்நிய செலாவணி மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
தங்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச் சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லை என்றும், இதனால் தங்களை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் சசிகலா, தினகரன் சார்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவர்களின் மனுவை விசாரித்த எழும்பூர் பொருளாதார குற்ற வியல் நீதிமன்ற நீதிபதி தட்சணாமூர்த்தி, அந்நிய செலாவணி மோசடி தொடர்பான ஒரு வழக்கில் இருந்து சசிகலாவையும், 2 வழக்குகளில் இருந்து தினகரனையும் விடுவித்து 18.5.2016-ல் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அமலாக்கப் பிரிவு உதவி இயக்குநர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வெளிநாட்டில் இருந்து சுசிலா என்பவரது பெயருக்கு ரூ.19 லட்சத்து 91 ஆயிரத்து 610 அமெரிக்க டாலர் வந்துள்ளது. அதன் பின்னர் சுசிலா, சென்னையைச் சேர்ந்த சித்ரா என்பவருக்கு கடன் கொடுத்துள்ளார். அந்த சித்ரா, ரூ.3 கோடி 52 லட்சத்தை சசிகலாவுக்கு கடனாக கொடுத்துள்ளார். இந்த தொகை 25 காசோலைகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. அதில் தலா ரூ.22 லட்சத்துக்கு 2 காசோலைகளை வி.என்.சுதாகரன், ஜெ.இளவரசி ஆகியோருக்கு கொடுத்துள்ளார். மீதமுள்ள காசோலைகள் எந்த பெயரும் குறிப்பிடாமல் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த கடன் தொகை ‘பரணி பீச் ரிசாட்ஸ்’ என்ற நிறுவனத்தின் பெயருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் காகித அளவில் செயல்படும் நிறுவனமாகும். வெளிநாட்டில் இருந்து சுசிலா என்பவர் மூலம் பணத்தை பெறும் நோக்கத்துக்காக இந்த நிறுவனம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் சசிகலா ஒரு பங்குதாரர் ஆவார்.
சசிகலாவுக்கு வந்துள்ள பெரும் தொகை, முறையான எந்த ஒரு அனுமதியின்றி வந்துள்ளது. எனவே, இவர் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய முகாந்திரம் உள்ளது. எனவே சசிகலாவை வழக்கில் இருந்து விடுவித்து எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இதேபோல் டி.டி.வி.தினகரன் விடுவிக்கப்பட்டதை எதிர்த்தும் அமலாக்கத் துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே மேலும் 3 அந்நிய செலாவணி மோசடி வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுக்கள் அனைத்தையும் நீதிபதி ஜி.சொக்கலிங்கம் விசாரித்து தீர்ப்பு அளிப்பதை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். நீதிபதி சொக்கலிங்கம், தற்போது உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பணிபுரிகிறார். இந்த வழக்கில் அவர் நேற்று அளித்த தீ்ர்ப்பு:
பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்படும் நிறுவனங்களின் அன்றாட நிர்வாகத்தில் சசிகலா உள்ளிட்டோர் பங்கெடுத்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. இதனால் சசிகலா, தினகரன் ஆகியோர் அந்நிய செலாவணி வழக்கை எதிர்கொள்ள வேண்டும். சசிகலா தன்னை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. சசிகலா, தினகரனை விடுவித்து எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.