

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து டெல்லியைச் சேர்ந்த நிபுணர் விசாரணை மேற்கொள்ளவார் என மத்திய ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: "டெல்லியில் இருந்து நிபுணர் ஒருவர் சென்னை செல்வார். குண்டுவெடிப்புக்கான காரணம் குறித்து அவர் தகவல்களை கண்டுபிடிப்பார். ரயில்வே நிர்வாகம் துரிதமாக மீட்பு பணிகளை மேற்கொண்டுள்ளது. தமிழக போலீஸாரும் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கின்றனர். முழுமையான தகவல்கள் கிடைத்த பிறகு தெரிவிக்கப்படும்" என்றார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டு குண்டுகள் வெடித்தன. இந்த சம்பவத்தில் ஸ்வாதி என்ற 22 வயது பெண் பலியானார்.
குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.5000 முதல் ரூ.25,000 வரையும் நிதி உதவி அறிவித்து ரயில்வே அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.