Published : 02 Jun 2016 11:57 AM
Last Updated : 02 Jun 2016 11:57 AM

ஓடத்துறை அரசு பள்ளியின் அபார சாதனை: எஸ்எஸ்எல்சி தேர்வில் 27 ஆண்டுகள் 100% தேர்ச்சி

கோபி அருகே உள்ள ஓடத்துறை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் கள் எஸ்எஸ்எல்சி தேர்வில் 27 ஆண்டுகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை பெற்றுள்ளனர்.

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வுகளில் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறுவதை சாதனையாக பள்ளி நிர்வாகங்கள் கொண்டாடி வருகின்றன. அர்ப்பணிப்பு உணர் வோடு பணியாற்றும் ஆசிரியர்கள், தேர்ச்சி பெற வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட மாணவர்களால் இத்தகைய 100 சதவீத தேர்ச்சி சாத்தியமாகி வருகிறது.

தனியார் பள்ளிகளோடு ஒப்பிடும்போது, மாணவர் சேர்க்கை, தேர்வு எழுத அனுமதிப்பது போன்றவற்றில் அரசு பள்ளிகள் எவ்வித பாரபட்சமும் காட்ட முடியாது என்றாலும், இதையும் மீறி பல்வேறு அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகின்றன. இந்த வகையில் கோபியை அடுத்த ஓடத்துறை சோமசுந்தரம் நினைவு அரசு உயர்நிலைப்பள்ளி எஸ்எஸ்எல்சி தேர்வில் 27 ஆண்டுகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று அரிய சாதனையை படைத்துள்ளது.

சுதந்திரத்திற்கு முன்பாக துவக்கப்பள்ளியாக ஆரம்பிக்கப் பட்டு, நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட இப்பள்ளி, 1981-ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. ஓடத்துறை யில் உயர்நிலைப்பள்ளி அமைய வேண்டும் என்பதில் பெரும் ஆர்வம் காட்டிய அப்பகுதியை சேர்ந்த ஓ.எஸ்.வெங்கடாசலபதி என்பவர் பள்ளி கட்டிடம் கட்டுவதற்காக மூன்றரை ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார். அவரது தந்தை சோமசுந்தரத்தின் நினைவாக அரசு உயர்நிலைப்பள்ளி உதயமானது.

பலரின் உழைப்பிற்கும் நன்றிக்கடன் செலுத்துவது போல, உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட முதல் ஆண்டில் தொடங்கி தொடர்ச்சியாக 13 ஆண்டுகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர் மாணவர்கள். இடையில் 6 ஆண்டுகள் மட்டும் ஒன்றிரண்டு மாணவர்கள் தோல்வியடைந்த போதும், 97 சதவீதத்திற்கும் மேலாக தொடர்ந்து பள்ளி தேர்ச்சி பெற்றது. கடந்த மூன்று ஆண்டு களாக எஸ்எஸ்எல்சி தேர்வில் தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ள ஓடத்துறை அரசு உயர் நிலைப்பள்ளி, இதுவரை 27 ஆண்டு கள் 100 சதவீத தேர்ச்சி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.

தலைமையாசிரியர் வெங்கடாசலம் கூறியதாவது:

இந்த ஆண்டு எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதிய 61 பேரும் தேர்ச்சி பெற்றதன் மூலம் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளோம். பொதுவாக, ஆங்கிலம், கணித பாடங்களை கற்பதில் மாணவர்கள் சற்று பின் தங்கி இருப்பார்கள். அவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி ஆசிரியர்கள் பாடம் கற்பித்து வருகின்றனர். பள்ளிக்கு அருகில் வசிக்கும் மகேஷ்வரி என்ற ஆசிரியை, பெற்றோர் அனுமதியுடன் மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை சிறப்பு வகுப்புகளை நடத்தி மாணவர்கள் தேர்ச்சி பெற முயற்சி எடுத்தார். அவரைப்போலவே, மற்ற ஆசிரியர்களும் எடுத்த முயற்சிகளால் இந்த சாதனை சாத்தியமாகிறது. இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் பள்ளி மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மனமுவந்து செய்து கொடுத்துள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x