

மதுரை மாநகராட்சி பகுதிகளில் மின்மோட்டார் மூலம் குடிநீர் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் சந்தீப் நந்தூரி எச்சரித்துள்ளார்.
பருவமழை பொய்த்ததால் மாநகராட்சி பகுதியில் உள்ள 100 வார்டுகளிலும் சீராக குடிநீர் விநியோகம் செய்ய முடியவில்லை. கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள பகுதிகளில் தனியார் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் குடியிருப்பு பகுதிகளில் வசதி படைத்த வர்கள், வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், தனியார் நிறுவனங்கள் இருக்கும் பகுதியில் குடிநீரை சட்டவிரோதமாக மின் மோட்டார் மூலம் எடுக்கின்றனர். மாநகராட்சி அதிகாரிகள், அவற்றை முறையாக கண்கா ணிக்காததால் குடிநீர் விநியோகம் செய்தாலும் பொதுமக்களுக்கு குறைந்தபட்ச குடிநீரும் சென்ற டையவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால், மாநகராட்சி ஆணையர், வார்டு வாரியாக குடிநீர் விநியோகத்தை கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதோடு, மின் மோட்டார்களை கொண்டு குடிநீரை உறிஞ்சினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து சந்தீப் நந்தூரி மேலும் கூறியதாவது:
குழாய்களில் மின்மோட்டார் மூலம் குடிநீர் எடுப்பதால் சில பகுதிகளுக்கு குடிநீர் சீராக வருவதில்லை என புகார் வருகிறது. சட்டவிரோதமாக மின்மோட்டார் மூலம் குடிநீர் எடுப்பவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப் படுவதுடன் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் குடிநீர் தொடர்பான புகார்களையும், மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவது தொடர்பான புகார்களையும் 2525252 என்ற தொலைபேசி எண்ணிலும், மாநகராட்சியின் 7449104104 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தெரிவிக்கலாம் என்றார்.