

தீபாவளி கூட்ட நெரிசலை சமாளிப்பது தொடர்பாக போக்கு வரத்து உயர் அதிகாரிகளின் கூட்டம் இன்றும், போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளின் கூட்டம் நாளையும் நடக்கவுள்ளது.
தீபாவளி பண்டிகை வருவதை யொட்டி, சென்னையில் தி.நகர் உள்ளிட்ட வணிக பகுதிகளில் ஏராளமான மக்கள் குவிந்து வருகின்றனர். அதேபோல் சொந்த ஊருக்கு செல்ல சிறப்பு ரயில்களின் முன்பதிவு முடிந்துள்ள நிலையில், பெரும்பாலானோர் அரசு பஸ்களை நம்பியுள்ளனர். இதற்கிடையே, போக்குவரத்து கழகங்கள் சார்பில் வரும் 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரையில் மொத்தம் 9,088 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தமிழக அரசு நேற்றுமுன்தினம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஏற்கெனவே உள்ள 9 கவுன்ட்டர்களில் டிக்கெட் முன்பதிவு நடந்து வருகிறது. இதுதவிர, 25 சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. வரும் 17-ம் தேதி முதல் இந்த சிறப்பு கவுன்ட்டர்கள் திறக்கப்படும். மேலும், பஸ் நிலையத்தில் உள்ள பணிமனை வேறொரு இடத்துக்கு மாற்றப்படவுள்ளது.
அந்த இடத்தில், 2 நடைமேடைகள் உருவாக்கப்பட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. மேலும், கோயம்பேடு மார்க்கெட் அருகே தற்காலிகமாக பஸ்கள் நிறுத்தப்பட்டு, மக்களின் கூட்டத் துக்கு ஏற்றவாறு பஸ்களை கொண்டு வந்து இயக்கவும் திட்ட மிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, சிறப்பு பஸ்களை இயக்குவது தொடர்பாக போக்குவரத்து அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடக்கிறது.
இதில், போக்கு வரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, போக்குவரத்துக்கழகங்களின் நிர்வாக இயக்குநர்கள் பங்கேற்கின்றனர். இதேபோல், போக்குவரத்து நெரிசலை குறைத்து, வாகனங்களை இயக்குவது தொடர்பாக போக்குவரத்துத் போலீஸ் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளின் கூட்டம் நாளை நடக்கவுள்ளது.