கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்தி: சர்வதேச அணு சக்தி முகமை அதிகாரி தகவல்
கூடங்குளம் அணு மின் நிலைய பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்தி கரமாக இருப்பதாக, சர்வதேச அணுசக்தி முகமை டைரக்டர் ஜெனரல் யுகியா அமனோ தெரிவித்தார்.
ஆஸ்திரியா நாட்டின் வியன்னா நகரில் செயல்படும் சர்வதேச அணுசக்தி முகமையின் தலைமை பொறுப்பை வகிக்கும் யுகியா அமனோ, திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணு மின் நிலையத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் கூறியதாவது:
கூடங்குளத்தில் ரஷ்ய தொழில் நுட்ப உதவியுடன் அமைக்கப் பட்டுள்ள 2 அணு உலைகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ள நவீன பாதுகாப்பு ஏற்பாடுகளில், சர்வதேச அணுசக்தி முகமை திருப்தியடைகிறது. இந்த அணு உலைகளின் செயல்பாடுகள், அதன் கட்டமைப்புகளை பார்வையிட்ட பின், அணுமின் உற்பத்தியில் புதிய நுணுக்கங்கள் கிடைத்துள்ளன.
தற்போது, உலகம் முழுவதும் 60 அணுமின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. 449 அணுமின் நிலையங்கள் மின் உற்பத்தி செய்து வருகின்றன. வரும் 2030-ம் ஆண்டில் சர்வதேச அளவில் அணுமின் உற்பத்தி 56 சதவீதம் அதிகரிக்கும். இதன்மூலம் அந்தந்த நாடுகளின் பொருளாதாரம் வளம்பெறும். மின் தேவை பூர்த்தியாகும்.
அனல்மின் நிலையங்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் மாசு, அணுமின் நிலையங்களால் ஏற்படுவதில்லை. காலநிலை மாற்றத்துக்கான எந்த விளைவு களையும் அணுமின் நிலையங்கள் உருவாக்குவதில்லை.
புகுஷிமா அணுஉலை விபத்துக்குப் பின், உலக அளவில் உள்ள அணுஉலைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சர்வதேச அணு சக்தி முகமை செயல்திட்டம் வரையறுத்துள்ளது. இந்த செயல்திட்டத்தில் கூறப்பட்ட விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே அணுஉலை திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய அணுசக்தி கழகத் தலைவர் எஸ்.கே.சர்மா, செயல் இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர், கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் எச்.என்.சாகு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
