

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 6 புதிய நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். பதவியேற்பு விழா விரைவில் நடக்க உள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 75. தற்போது தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியுடன் சேர்த்து மொத்தம் 48 நீதிபதிகள் பணியில் உள்ளனர். 27 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில், புதிதாக 6 நீதிபதிகளை நியமிப்பதற்கான மத்திய சட்ட அமைச்சகத்தின் பரிந்துரைக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
அதன்படி புதிய நீதிபதிகளாக அப்துல் குத்தூஸ், எம்.தண்டபாணி, ஆதிகேசவலு, ஜெகதீஷ் சந்திரா, ஜி.ஆர்.சுவாமிநாதன், பவானி சுப்புராயன் ஆகிய 6 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சம்பிரதாய முறைப்படி தேவநாகரி வடிவில் நீதிபதிகள் கையெழுத்திடுவதற்கான கோப்பு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. அதில் 6 நீதிபதிகளும் கையெழுத்திட்டனர்.
இதைத் தொடர்ந்து, மத்திய அரசிடம் இருந்து இவர்களுக்கான முறையான நியமன உத்தரவு அனுப்பிவைக்கப்பட்டதும், பதவியேற்பு விழா நடைபெறும் என உயர் நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. 6 புதிய நீதிபதிகளையும் சேர்த்து உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 54 ஆக உயர்கிறது. 21 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.