Last Updated : 10 Aug, 2016 08:27 AM

 

Published : 10 Aug 2016 08:27 AM
Last Updated : 10 Aug 2016 08:27 AM

ஓடும் ரயிலில்தான் பணம் கொள்ளை: பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் அதிர்ச்சி தகவல்

ஓடும் ரயிலில்தான் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று சரக்கு ரயில் பெட்டிக்கு பாதுகாப்பாக வந்த போலீஸ்காரர் உறுதியாகத் தெரிவித்தார்.

சேலத்தில் இருந்து சென் னைக்கு வந்த ரயிலில் சரக்குப் பெட்டியின் மேற்கூரையில் ஓட்டை போட்டு கோடிக்கணக்கான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அந்தப் பெட்டிக்கு பாதுகாப்பாக வந்த போலீஸ்காரர்களில் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு போலீஸ்காரர் ‘தி இந்து’ நிருபரிடம் கூறியதாவது:

ஒவ்வொரு முறையும் சரக்கு பெட்டியில் பணப் பெட்டி கள் ஏற்றப்பட்டதும் அந்த பெட்டிக்கு ‘சீல்’ வைக்கப்படும். அதுபோலத்தான் இந்தப் பெட்டிக்கும் ‘சீல்’ வைத்தார்கள். அவ்வாறு ‘சீல்’ வைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்துகொண்டு சரக்குப் பெட்டிகளுக்கு அடுத்ததாக இருந்த பயணிகள் பெட்டியில் பாதி அளவுக்கு போலீஸ்காரர்களாகிய நாங்கள் பாதுகாப்புக்காக பயணம் செய்தோம்.

வழக்கமான கண்காணிப்பு

ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் ரயில் நிற்கும்போதெல்லாம் நாங்கள் இறங்கி சரக்குப் பெட்டியில் ‘சீல்’ உடைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்துகொண் டோம். சென்னைக்கு ரயில் வந்த பிறகும் ‘சீல்’ உடைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்தோம். ரிசர்வ் வங்கி அதிகாரிகள் முன்னிலையில் சரக்குப் பெட்டியைத் திறந்து பார்த்தபோது தான் பெட்டியின் மேற்கூரையில் பெரிய ஓட்டை போட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. அதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தோம். சரக்குப் பெட்டியின் மேற்கூரையில் பெரிய ஓட்டை போட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. அதைப் பார்த்தபோது ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து நாங்கள் இன்னமும் மீளவில்லை.

ஓடும் ரயிலில்தான் கொள்ளை

விருத்தாசலத்தில் ரயில் இன்ஜின் மாற்றப்பட்டபோது நாங்கள் சரக்குப் பெட்டிக்கு அருகிலேயே நின்றிருந்தோம். அதுபோல சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு ரயில் வந்து, பயணிகளை இறக்கிவிட்ட பிறகு, யார்டுக்கு போய் அங்கிருந்து பார்சல் அலுவலகத்துக்கு சரக்குப் பெட்டிகள் வரும் வரை நாங்கள் மிகுந்த விழிப்புணர்வோடு இருந்தோம்.

அதனால் யார்டில் இந்த சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை. நிச்சயமாக ஓடும் ரயிலில்தான் பெட்டியின் மேற்கூரையில் பெரிய ஓட்டைபோட்டு உள்ளே இறங்கி கொள்ளையடித்திருக்கிறார்கள். ஒரு ரயில் நிலையத்துக்கும் மற்றொரு ரயில் நிலையத்துக்கும் இடையே எவ்வளவு நேரத்தில் ரயில் போய்ச் சேரும் என்பதைக் கணக்கிட்டு தீவிரமாக திட்டமிட்டுத்தான் இந்த கொள்ளை நடந்துள்ளது. என் அனுபவத்தில் இப்படியொரு சம்பவத்தை கேள்விப்பட்டதுகூட இல்லை என்றார் அவர்.

வடமாநில கொள்ளையர் கைவரிசை?

கொள்ளை குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “கொள்ளையர்கள் திட்டம் போட்டு கைவரிசை காட்டியுள்ளனர். சாதாரண கொள்ளையர்களால் இதுபோன்று செய்ய முடியாது. பல கொள்ளைகளில் ஈடுபட்டவர்களால் மட்டுமே இப்படி துணிந்து செய்ய முடியும். எனவே, வட மாநில கொள்ளையர்கள் இங்குள்ளவர்களின் துணையுடன் கொள்ளை சம்பவத்தை நடத்தியிருக்க வாய்ப்பு உள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x