Published : 30 Nov 2013 12:00 AM
Last Updated : 30 Nov 2013 12:00 AM

ஏற்காட்டில் விற்காத வீடுகளும் விவசாயிகளின் சோகக் கதையும்!

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்காடு மலை உச்சியான பகோடா பாயிண்டில் அரசு புறம்போக்கு நிலத்தில் குத்தகைக்கு விவசாயம் செய்து வந்த விவசாயிகளிடம் இருந்து நிலத்தைப் பறித்து, அங்கு 67 சொகுசு வீடுகளைக் கட்டியது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம். ஆனால், இன்று அந்த வீடுகளின் கதவுகள் தொடங்கி தரையில் பதிக்கப்பட்ட கிரானைட் வரை களவுபோய்விட்ட நிலையில் பாம்புகள் உலவும் புதர்களுடன் காட்சியளிக்கிறது அக்குடியிருப்பு!

கடந்த 1997-98-ல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகோடா பாயிண்டில் 17 ஏக்கரில் 67 சொகுசு வீடுகளைக் கட்டியது. தரைத்தளத்தில் இரண்டு படுக்கை அறைகள், நவீன சமையலறை, வீட்டின் உள்ளாகவே மேல்தளத்துக்கு செல்லும் படிகட்டுகள், மேல்தளத்தில் ஓர் அறை, தேக்கு மரக் கதவு, வீடு முழுவதும் கிரானைட் கற்கள், இரண்டு நவீன குளியலறைகள், பிரமாதமான உள் அலங்காரம் என வீடுகள் ஆடம்பரமாக கட்டப்பட்டன.

அதில் 16 வீடுகளை நடுத்தர வருவாய் பிரிவினருக்கு ஒதுக்கிய வாரியம் அன்றைக்கு அதன் விலையாக ரூ.6.45 லட்சமும், மீதமுள்ள உயர் வருவாய் பிரிவினருக்கான வீடுகளுக்கு ரூ.10.6 லட்சமும் விலை நிர்ணயித்தது. இந்த வீடுகள் மலையின் உச்சியில் இருப்பதால் வீட்டின் பால்கனியில் இருந்து மலைப் பள்ளத்தாக்கு உள்பட இயற்கை அழகை ரசிக்கலாம். ஆனால், வீட்டு வசதி வாரியம் தண்ணீர் குறித்து சிந்திக்கவே இல்லை.

பாழடைந்த வீடுகள்

தண்ணீர் வசதி இல்லாததாலும் அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டதால் மலைவாழ் பழங்குடியினருக்கான ஏற்காட்டில் பட்டா கிடைப்பது சிரமம் என்பதாலும் இன்றுவரை ஒரு வீடுகூட விற்பனை ஆகவில்லை. புதர் மண்டி பாழடைந்துள்ள இந்த வீடுகள், பகலில் விபசாரமும் குடிகாரர்களுக்கான “பார்” ஆகவும் திகழ்கிறது.

நிற்க, இந்தத் தகவல்கள் பலரும் அறிந்ததுதான். ஆனால், இங்கிருந்த விவசாயிகள் என்ன ஆனார்கள் என்பது பலருக்கும் தெரியாது. இந்த பகுதியில் கந்தாயத்துக்கு (குத்தகை) விவசாயம் பார்த்து வந்தவர்கள் வெள்ளக்கொம்பன் - உண்ணாமலை தம்பதி. இன்று அவர்கள் பிழைப்புக்கு வழியில்லாமல் சுற்று வட்டார வனங்களில் விறகு பொறுக்கி காலம் தள்ளுகிறார்கள். வெள்ளக்கொம்பனிடம் பேசினோம்.

எம்.ஜி.ஆர். தந்த நிலம்

“எங்களுக்கு ரெண்டு பொட்டப்புள்ளைங்க. அதுக்கு மேல வேணாமுன்னு நான் குடும்பக் கட்டுப்பாடு பண்ணிக்கிட்டேன். அப்படி பண்ணிகிறவங்களுக்கு கவர்மெண்ட்டுல நிறைய சலுகை அறிவிச்சி இருக்காங்கன்னும் டாக்டர் சொன்னாங்க. அப்ப எம்.ஜி.ஆர். ஆட்சி. அவர் உடனே என் பெயருக்கு இங்க மூணு ஏக்கர் 20 சென்ட் நிலத்தை கந்தாயத்துல விவசாயம் செஞ்சிக்க உத்தரவிட்டார். முள்ளுக்காடும், பாறையுமா இருந்த பூமியை நானும் என் பொஞ்சாதியும் பல வருஷமா திருத்தி, சின்னதா கிணறு வெட்டி விவசாய நிலம் ஆக்கினோம். சில்வர் ஓக் மரங்கள், காபிச் செடி, கமலா ஆரஞ்சு, பீன்ஸ், பட்டுப்பூச்சி பண்ணை, எங்களுக்கு சின்னதா ஒரு வீடு அமைச்சு நாங்களும் நல்லாதான்யா இருந்தோம்.

பதினஞ்சு வருஷத்துக்கு முன்னால எந்த முன்னறிவிப்பும் இல்லாம அதிகாரிங்க, போலீஸ் வந்து எல்லாத்தையும் அழிச்சுப்போட்டு போயிட்டாங்க.

அதுக்கப்புறம் எங்க கண்ணு முன்னாடியே இந்த சொகுசு வீடுகளை எல்லாம் கட்டுனாங்க. இதுசம்பந்தமா மெட்ராஸ் ஐகோர்ட்டுல கேஸும் போட்டிருக்கேன்.எங்க வயித்துல அடிச்சு கட்டுன பாவமா என்னன்னுத் தெரியலை... இந்த வீடுகள்ல இன்னைக்கு பாம்புங்கதான் குடியிருக்கு.”

விட்டிருந்தால் விவசாயி களாவது பிழைத்திருப்பார்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x