கர்நாடகத்தில் உள்ள தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துக: வாசன்

கர்நாடகத்தில் உள்ள தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துக: வாசன்
Updated on
1 min read

கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழர்களின் பாதுகாப்பினை மத்திய, மாநில அரசுகள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக திங்கட்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கர்நாடக மாநிலத்தில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன் விளைவாக சட்டம், ஒழுங்கு பாதிக்கின்றது. சாதாரண மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமை, இரு மாநில உறவுகளிலே விரிசல், போக்குவரத்துக்கு தடங்கல் ஏற்பட்டு பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இரு மாநில விவசாயிகளையும் ஒரே வர்க்கமாக பார்க்க வேண்டும். மேலும் கன்னட அமைப்புகள் நியாயத்தின் அடிப்படையில் பொறுமை காக்க வேண்டும்.

இந்நிலையில் பெங்களூரில் உள்ள தமிழ் இளைஞர் ஒருவர் முகநூலில் தெரிவித்த கருத்தை காரணம் காட்டி அவரை கடுமையாக தாக்கியிருப்பதும். பொது மன்னிப்பு கேட்க வைத்ததும் ஏற்புடையதல்ல. இச்செயலை காவல்துறையினர் தடுத்து நிறுத்தாமல், வேடிக்கைப் பார்த்தது அங்கு ஆட்சி புரிகின்ற அரசாங்கத்தின் அலட்சியப் போக்கினை பிரதிபலித்திருக்கிறது.

எனவே, இது போன்ற பொதுமக்கள் குறிப்பாக தமிழர்கள் பாதிக்கப்படக்கூடிய செயல்களையும், பாதுகாப்பற்ற தன்மையையையும் உடனடியாக கர்நாடக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். மேலும் கர்நாடக அரசு இரு மாநில மக்களின் நலன் கருதி தமிழர்களுக்கும் உரிய பாதுகாப்பினை வழங்க காவல் துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

மத்திய அரசு இரு மாநில உறவுகளுக்கு பாதகம் ஏற்படாத வகையில் நடுநிலையோடு செயல்பட வேண்டும். தமிழக அரசும் கர்நாடகாவில் உள்ள தமிழர்களுக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்திக்கொள்ள கர்நாடக அரசோடும், மத்திய அரசோடும் பேசி நல்ல தீர்வு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in