

முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் தூண்டுதலால் நடந்ததாகக் கூறப்படும் ஒரு கொலை சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. புலன் விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கொளத்தூரைச் சேர்ந்த எஸ்.சிவா என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
எனது மகன் புவனேஸ்வரன் கடந்த 10.1.2012 அன்று ஒரு கும்பலால் வெட்டிக் கொல்லப்பட் டார். நில விவகாரம் தொடர்பான பிரச்சினை காரணமாக, முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் தூண்டுதலின் பேரில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக நான் கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்.
எனினும் போலீஸார் நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் குற்றவாளி யாகச் சேர்க்கப்படவில்லை. ஆகவே, இது தொடர்பாக மறு விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று சிவா தனது மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அவர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.செந்தில்நாதன், காவல் துறை தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் எஸ்.சண்முகவேலாயுதம் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், இந்த கொலை வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. புலன் விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிபதி நாகமுத்து நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
“கைது செய்யப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளது. எனினும் கொலை நடந்த விதம் தொடர்பாக குற்றப்பத்திரி கையில் காவல் துறையினர் கூறியுள்ளதை நிரூபணம் செய்யும் வகையில் எந்த ஆதாரமும் காட்டப் படவில்லை.இந்த வழக்கில் காவல் துறையினர் முறையாக புலன் விசாரணை மேற்கொள்ளவில்லை. குற்றப்பத்திரிகையில் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. இந்நிலையில் குற்றவியல் நீதி மன்றத்தில் கொளத்தூர் காவல் நிலைய போலீஸார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்படுகிறது.
இந்த வழக்கு தொடர்பான எல்லா ஆவணங்களையும் கொளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் சென்னையில் உள்ள சி.பி.ஐ. இணை இயக்குநரிடம் 7 நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும். டி.எஸ்.பி. அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி தலைமையில் சி.பி.ஐ. புலன் விசாரணை நடைபெற வேண்டும். அடுத்த 6 மாதங்களுக்குள் சி.பி.ஐ. புலன் விசாரணை அறிக்கையை நீதி மன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.