

டாஸ்மாக் கடைகளில் 21 வயதுக்கு கீழே இருப்பவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்று அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் கே.பாலு என்பவர் இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:
தமிழக அரசின் மொத்த வருவாயில் பாதிக்கும் மேல் டாஸ்மாக் மதுபான விற்பனை மூலம் கிடைக்கிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் மதுபான விற்பனை மூலம் ரூ.22 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. அதே நேரத்தில் மதுபானம் அருந்து பவர்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் தொல்லைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
சாலை விபத்துகள், கல்லீரல் பாதிப்பு உள்ளிட்ட பலவித நோய்கள், குடும்ப வன்முறை போன்றவையும் அதிகரித்தபடி உள்ளன. இதற்கிடையே 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு டாஸ்மாக் கடை களில் மதுபானம் விற்பனை செய்யக் கூடாது என்று முடிவெடுத்த தமிழக அரசு, கடந்த 2004-ம் ஆண்டு அது தொடர்பான அறிவிக்கையையும் வெளியிட்டது. எனினும், இதை அமல்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. மது விற்பனை செய்யும் முன் யாரிடமும் வயதுச் சான்றிதழ் கேட்கப்படுவதில்லை. அவ்வாறு கேட்கும்படி டாஸ்மாக் பணியாளர்களுக்கு எவ்வித அறிவுறுத்தலும் இல்லை. இதன் காரணமாக பள்ளி மாணவர்கள் தங்கள் சீருடையுடனேயே சென்று மதுபானம் வாங்கும் நிலை உள்ளது. இது சமுதாயத்துக்கு பல தீங்குகளைத் தரும்.
எனவே டாஸ்மாக் கடைகளில் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்பதில்லை என்ற முடிவை அமல்படுத்த மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். மேலும், 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட மாட்டாது என்ற அறிவிப்பு பலகையை அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு வழக்கறிஞர் பாலு தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) ஆர்.கே.அகர்வால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு தொடர்பாக பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட மாட்டாது என்ற அறிவிப்பு பலகையை அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் வைக்க வேண்டும்.