

உலக அளவில் வெங்காய பயன்பாட்டுக்கான வணிக நகரமாக பெரம்பலூரை மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என இந்திய பயிர் பதன தொழில்நுட்பக் கழக இயக்குநர் சி.அனந்தராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் வெங்காய வணிக வளாகத்தில், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை, இந்திய பயிர் பதன தொழில்நுட்பக் கழகம் இணைந்து நடத்திய சின்ன வெங்காயத்தில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பது குறித்த பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது.
இந்த முகாமில் அனந்தராமகிருஷ்ணன் பேசியதாவது: சின்ன வெங்காயம் அந்நியச் செலாவணியை ஈட்டித்தரக்கூடிய ஒரு முக்கியமான பயிர். உலகளவில் வெங்காய உற்பத்தியில் இந்தியா 2-ம் இடம் வகிக்கிறது.
உள்நாட்டு தேவை மற்றும் ஏற்றுமதி தேவையை சமாளிக்க வெங்காய உற்பத்தியில் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வசதிகள் அவசியம். இதைக் கருத்தில்கொண்டு, இந்திய பயிர் பதன தொழில்நுட்பக் கழகம் சார்பில், தமிழகத்தில் சின்ன வெங்காயம் அதிகம் உற்பத்தியாகும் பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயத்தில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பது தொடர்பான பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.
சின்ன வெங்காய உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், வெங்காயத்திலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பது, அதை விற்பனை செய்வது குறித்து அறிந்துகொள்வதன் மூலம், வெங்காய விலை வீழ்ச்சி அடையும்போது பொருளாதார ரீதியாக அதிக பாதிப்பு ஏற்படாமல் சமாளிக்கலாம். மேலும், இதுபோன்ற தொழில்நுட்பங்கள், தமிழக அளவில் சின்ன வெங்காய உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் பெரம்பலூர் மாவட்டத்தை உலகளாவிய வெங்காய பயன்பாட்டுக்கான வணிக நகரமாக மாற்ற உதவும் என்றார்.
பயிற்சி முகாமில், சின்ன வெங்காயத்திலிருந்து வெங்காய ஊறுகாய், வெங்காய கூழ் மற்றும் உப்புக்கரைசலில் ஊரவைத்த வெங்காயம் உள்ளிட்டவற்றை தயாரிப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
வயல்களில் இருந்து அறுவடை செய்யப்படும் சின்ன வெங்காயத்தை அதிக நாட்கள் நிறம் மாறாமல், எடை குறையாமல் பாதுகாத்து வைப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள வெங்காய சேமிப்பு பட்டறையின் அமைப்பு குறித்து இந்திய பயிர் பதன தொழில்நுட்பக் கழக அலுவலர்கள் செயல்விளக்கம் அளித்தனர்.
இதில், வேளாண்மை இணை இயக்குநர் பொ.சந்திரன், துணை இயக்குநர் (பொறுப்பு) என்.சர்புதீன் உள்ளிட்ட அலுவலர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.