

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், "மத்திய பாஜக அரசால் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறது. காவிரி நதிநீர் பிரச்சனையில் மத்திய அரசு துரோகம் செய்தது. அதன் விளைவாக காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாக மாறி, பயிர்கள் கருகி, இந்நாள் வரை 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாண்டு மடிந்துள்ளனர்.
பொங்கல் பண்டிகைக்கு கட்டாய விடுமுறை இல்லை என அறிவித்து, கடும் எதிர்ப்பின் காரணமாக அதிகாரிகள் செய்திட்ட பிழை எனக்கூறி தப்பித்துக் கொண்டது.
தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டு விழாவாக பன்னெடுங்காலமாக நடத்தப்பட்டு வரும் ஜல்லிக்கட்டிற்கு தடைவிதித்தது, கடந்த மூன்றாண்டு காலமாக நீதிமன்றத்தை காரணம் காட்டி ஏமாற்றி வந்தனர். இவ்வாண்டு உறுதியாக ஜல்லிக்கட்டு நடைபெறும் என்றும், அதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருவதாகவும் பாஜக தலைவர்களும் மத்திய அமைச்சர்களும் உறுதியளித்தனர். ஆனால் கடைசி நேரத்தில் வழக்கம் போல் கைவிரித்து விட்டனர். மாநில முதலமைச்சர் ஜல்லிக்கட்டு உறுதியாக நடைபெறும் என்று அறிவித்ததும் காணல்நீரானது.
நீதிமன்றத்தைக் காரணம்காட்டி, மத்திய, மாநில அரசுகள் பிரச்சனையில் நழுவிட முயல்வது ஏற்கத்தக்கதல்ல.
தமிழக இளைஞர் - மாணவர்கள் தாங்கள் இனியும் ஏமாறமாட்டோம், எங்களின் பண்பாட்டை காப்பாற்றுவோம் என்ற நிலையில், கடந்த பத்து தினங்களுகு;கும் மேலாக போராடி வருகின்றனர். அதன் உச்சகட்டமாக தடைகளைப் பற்றி கவலைக் கொள்ளாது தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இளைஞர்களும் மாணவர்களும் ஜல்லிக்கட்டு போராட்டத்தை மிக வெற்றிகரமான முறையில் நடத்தியுள்ளனர்.
அலங்காநல்லூரில் நேற்று (16.01.2017) காலை முதல், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும், இளைஞர்களும் மிக அமைதியான முறையில் தங்களின் உணர்வை வெளிப்படுத்தும் விதமாக போராட்டத்தை தொடர்ந்து நடத்துகின்றனர். இப்போராட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் காளிதாசு உட்பட தோழர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
போராட்டத் தொண்டர்களின் எண்ணிக்கையை விட அதிகஅளவில் காவல் துறையினரை குவித்து அச்சுறுத்தும் அரசின் நடவடிக்கையால் பதட்டமான நிலை நீடித்தது வருகிறது.
போராட்டம் நடத்தும் இளைஞர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வுகாண அரசு முயற்சிக்காமல், காவலர்களைக் கொண்டு போராட்டக்காரர்களை குண்டுக்கட்டாக தூக்கி, கைது செய்திருப்பது ஜனநாயக வழி முறையல்ல கடும் கண்டனத்திற்குரியது.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் - இளைஞர்களை எவ்வித நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காது, அடக்குமுறைக் கொண்டு தீர்வுகாண முயல்வது ஒருபோதும் வெற்றிபெறாது.
பொங்கல் முடிந்து விட்டதாக கருதி ஜல்லிக்கட்டு பிரச்சனையும் முடிந்துவிட்டதாக கருதாமல், ஜல்லிக்கட்டு சட்டபூர்வமாக நடைபெற உரிய அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்து தீர்வுகாண வேண்டும், தமிழ்நாடு அரசு அதற்குரிய முறையில் முனைப்புடன் செயல்பட வேண்டும்.
தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக ஜனநாயக முறையில் போராடிய மாணவர், இளைஞர்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.