Published : 11 Oct 2014 10:32 AM
Last Updated : 11 Oct 2014 10:32 AM

மலாலாவுக்கு நோபல் பரிசு: பெண் கல்வி ஆர்வலர்கள் வரவேற்பு

பெண் குழந்தைகளின் கல்விக்காக போராடி வரும் பாகிஸ்தான் சிறுமி மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப் பட்டிருப்பதற்கு பெண்கள் நல ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானை சேர்ந்தவர் மலாலா யூசப்சய். பள்ளிப் பருவத் தில் இருந்தே பெண் குழந்தைகளின் கல்விக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். இதனால், கடந்த 2012-ல் தீவிரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டுக்கு ஆளானார். தீவிர சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைத்தவர், பெண் கல்விக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அவருக்கு இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மகளிர் நல அமைப்புகள், பெண் உரிமை ஆர்வலர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் ஆதரவும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

ஆயிஷா நடராஜன்: மலாலாவுக்கு நோபல் பரிசு கிடைத்திருப்பது குழந்தைகள் உரிமைகள், பெண் குழந்தைகளின் கல்வி ஆகியவற்றுக்கு கிடைத்த அங்கீகாரம். உயிரைப் பணயம் வைத்து பள்ளிக்கு சென்றார் என்பதைவிட முக்கியமான 2 விஷயங்கள் இதில் உள்ளன. இந்த நூற்றாண்டில் குழந்தைகளால் பெரிய விஷயங்களைப் புரிந்துகொண்டு செயல்பட முடியும் என்பதை நிரூபித்துள்ளார்.

தினசரி வாழ்க்கையில் பெரியவர்கள் ஒதுக்கிவிடுகிற, சகித்துக்கொள்கிற விஷயங்களில் குழந்தைகள் நினைத்தால் பெரும் பங்காற்ற முடியும் என்று காட்டியுள்ளார். வகுப்பறையில் ஆசிரியர்களைவிட குழந்தைகள் புத்திசாலிகளாக இருக்கமுடியும் என்பதையும் உலகுக்குச் சொல்கிறார். மற்றொன்று, தொழில்நுட்பம் மூலம் கிடைத்திருக்கும் தகவல் சுதந்திரத்தை முறையாகப் பயன்படுத்தினால் உலக மக்களின் கவனத்தை குழந்தைகள் கல்வி போன்றவற்றில் திருப்ப முடியும் என்பதும் தெரியவருகிறது.

நோபல் பரிசு பெறுவதற்கான தகுதியை மலாலா ஏற்கெனவே அடைந்துவிட்டார். தற்போது அந்த அங்கீகாரம் கிடைத்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. மலாலா பாதுகாப்பாக இருந்து மேலும் சாதனைகள் புரிய வாழ்த்துகள்!

கவிஞர் சல்மா: பொது வெளியில் இருந்து பெண்களை விலக்கிவைக்க வேண்டும் என்ற நோக்குடன் செயல்படும் தலிபான் போன்ற மதவாத பிற்போக்கு சக்திகளுக்கு எதிரான இஸ்லாமிய பெண்களின் பிம்பமாக மலாலா திகழ்கிறார். பெண்கள் கல்வி கற்கக் கூடாது என்று இஸ்லாம் கூறவில்லை. நபிகளின் மனைவி கதிஜாகூட வியாபாரியாக இருந்தவர்.

தங்களது விடுதலை, உரிமைகளைக் கோரும் இஸ்லாமியப் பெண்களின் போராட்டப் பாதைக்கு இந்த விருது உந்துசக்தியாக இருக்கும். இஸ்லாமிய நாடுகள் பிற்போக்குத் தனமானவை என்ற கருத்தை வலியுறுத்தும் நோக்கி லேயே மேற்கத்திய நாடுகள் மலாலாவைக் கொண்டாடுகின்றன. ஆனால், மலாலாவின் நோக்கம் உன்னதமானது. பெண்களின் கல் விக்கு உலக அளவில் அங்கீகாரம் கொடுத்தே ஆகவேண்டும் என்று நிலைக்கு நாம் வந்துவிட்டோம். இனியும், மலாலா தனியாக போராடஅவசியம் இல்லை.

மலாலாவைப் பார்த்து பல்வேறு இடங்களில் இருந்தும் வெளியே வரும் பெண் களை ஒருங்கிணைக்க வேண்டும். ஆபத்துகள் சூழ்ந்த வாழ்க்கையை எதிர்கொள்ளும் மலாலாவுக்கு அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x